எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாக காதல் திருமணம் செய்த தம்பதியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சாதி ஒழிப்பு, சமூக நீதி என பாடம் எடுக்கும் ஆட்சியில் திமுக பிரமுகரே சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் டேனியல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். டேனியலும் அவருடன் பள்ளியில் படித்தவரும் திமுக பிரமுகர் விஜய் என்பவரின் மகளுமான அபர்ணாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் குறித்து தெரிந்த திமுக பிரமுகர் விஜய்யும் அவரது குடும்பத்தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் அபர்ணாவும் அவரது காதலரான டேனியலும் கடந்த 23 ஆம் தேதி சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். டேனியலும் அபர்ணாவும் வேறு வேறு சமூகம் என்பதால் இவர்கள் திருமணத்தை ஏற்காத அபர்ணாவின் தந்தை தனது மகளை வீட்டுக்கு அனுப்புமாறு மிரட்டி வந்துள்ளார். ஆனால் அபர்ணாவை டேனியல் குடும்பத்தினர் அனுப்பாத நிலையில் அபர்ணாவும் கணவர் வீட்டுக்குத் தான் செல்வேன் என்று உறுதியாக இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகரும் அபர்ணாவின் தந்தையுமான விஜய், காதல் கணவரின் குடும்பத்தினரின் தலையை வெட்டி சாலையில் உருட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தனது நெருங்கிய நண்பரும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தந்தையும் திமுக பிரமுகருமான ராஜனிடம் தனது மகளை காதல் கணவரிடமிருந்து பிரித்து அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து மேயர் பிரியாவின் தந்தையான ராஜன், அபர்ணா திருமணம் செய்து கொண்ட டேனியலின் தந்தை ஜோசப்பை வரவழைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரது குடும்பத்தை வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த புதுமணத் தம்பதியான அபர்ணாவும் டேனியலும் ஜோசப்புடன் சென்று ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் நிலையத்திலும் மேயரின் தந்தை ராஜன் காதல் திருமணம் செய்த இளம் தம்பதியரையும் ஜோசப்பையும் தாக்கியதோடு மிரட்டலும் விடுத்துள்ளார்.
காவல் நிலையத்திலேயே மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அபர்ணாவும் டேனியலும் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேயர் ப்ரியாவின் தந்தை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதால் அவர் மீதும் அபர்ணாவின் தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதி ஒழிப்பு,சமத்துவம் குறித்து மற்ற அரசியல் கட்சிகளுக்கு பாடம் எடுத்தும் வரும் திமுக ஆட்சியில் திமுக பிரமுகர்களே சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்திருப்பது திமுகவின் போலி சமத்துவத்தை அம்பலமாக்கியுள்ளது.