பொது போக்குவரத்தின் ராஜா...10-வது ஆண்டில் மெட்ரோ ரயில் சேவை

எழுத்தின் அளவு: அ+ அ-

 வளர்ந்து வரும் நவநாகரீக சூழலில் காலத்திற்கு ஏற்ப அறிவியல் தன் வளர்ச்சியை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது. பயணத்தை எளிமையாக்கி, குளிர்சாதன வசதியுடன் சொகுசான பாதுகாப்பான பொது பயணத்தை சாத்தியமாக்கி உள்ள மெட்ரோ ரயில் சேவை 9 ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைத்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் முதல் திட்ட மெட்ரோ ரயில் கோயம்பேடு - பரங்கிமலை இடையே தொடங்கப்பட்டது. சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு 32 ரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு 18.38 கோடி ரூபாய் செலவில் மக்கள் நலனுக்காக தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட ஒப்பற்ற திட்டமாக நிலைத்து இயங்குகிறது மெட்ரோ ரயில் சேவை. தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் மெட்ரோ ரயிலில் பயணித்த ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை 30 கோடியை நெருங்கி இருக்கிறது. 

தற்போது சென்னை சென்ட்ரல் -கோயம்பேடு-பரங்கிமலை மற்றும் விம்கோ நகர்-விமான நிலையம் வரை பயணிக்கும் மெட்ரோ ரயில்கள் சென்னையின் புறநகர் பகுதிகளையும் இணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. சுரங்கம், மற்றும் உயர்பாலங்களில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை, குளு குளு வசதியுடன் சொகுசான பயணத்தை பயணிகளுக்கு அளித்து வருகிறது.

குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பில் சென்னை மெட்ரோ ரயில் திறம்பட செயலாற்றி வருகிறது. பெண்களுக்கு என தனி இருக்கை வசதி, கழிவறை வசதி, பிங்க் ஸ்குவாட்' எனப்படும் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் குழு மற்றும் அவசர உதவி எண்கள் போன்றவை பெண் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. 

ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையங்களில் குவியும் நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்கும் முறையிலும் சிறு மாற்றம் கொண்டு வந்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், பயண அட்டைகள், whatsapp மூலமாகவும், யூபிஐ மூலமாகவும் இருபது சதவீத கட்டண சலுகைகளுடன் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிகளை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

உரிய அனுமதியுடன் வழங்கப்படும் ஸ்மார்ட் சைக்கிள்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள், நகரின் பிரதான இடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், ஏடிஎம் வசதிகள் என மக்களுக்கு தேவையான வசதியான ஏதுவான அனைத்து சூழலையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தி உள்ளது நாளுக்கு நாள் மக்கள் கூட்டத்தை அதிகரிக்க உதவி உள்ளது.

தற்போது முழு வீச்சில் இரண்டாம் திட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2028 ஆம் ஆண்டு பணிகள் நிறைவடையும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய மெட்ரோ ரயில் திட்டம் என்ற சிறப்பை பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day