மணிமுக்தா அணையில் மணல் கொள்ளை... கண்டு கொள்ளாத விளம்பர அரசு...

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களின் ஒன்றான மணிமுக்தா அணை, கனிமவளக் கொள்ளையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என பல தரப்பினரும் புகார் அளித்தும் தடையின்றி அரங்கேறி வரும் கனிம வளக் கொள்ளை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த சூளாங்குறிச்சியில் அமைந்துள்ளது மணிமுக்தா அணை. 36 அடி உயரம் கொண்ட மணிமுக்தா அணை கடந்த 1970- ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் ஐந்தாயிரத்து 493 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மணி மற்றும் முக்தா ஆறுகள் இந்த அணைக்கு நீராதாரமாக விளங்குகின்றன.  

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்த மணிமுக்தா அணையின் தற்போதைய நிலை தான் பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. கனிமவளக் கொள்ளையர்களால், அணைப்பகுதியில் நன்கு செழித்து வளர்ந்துள்ள பலவகை  மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டு சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் உள்ளிட்ட கனிம வளங்களை கடத்தப்பட்டு வருகின்றன. 

நாள்தோறும் இரவு நேரங்களில் அணையில் இருந்து கனிம வளத்தை ஏற்றிச் செல்லும் லாரிகளால்  வீடுகளில் தூங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக அகரக்கோட்டாலம், அணைகரைக்கோட்டாலம், பரமநத்தம், பிச்சநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

கனிமவள கொள்ளையில் ஈடுபடும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் அந்த வழியாக பள்ளி பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் சாலைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 

இது குறித்து மக்கள், சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளின் நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் பலமுறை புகார் அளித்தும்  பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் கனிம வளக் கொள்ளையை தடுக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் தெரிவிக்கின்றனர்.  

எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதே மணிமுக்தா அணை சுற்றுவட்டார கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. விளம்பர திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை கிராம மக்களோடு சேர்ந்து நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Night
Day