எழுத்தின் அளவு: அ+ அ- அ
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை கடும் போராட்டத்திற்கு பிறகு அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சமூக வலைத்தளம் மூலம் இவ்வாறும் உதவலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ள செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சாலையில் கண்டால் நமக்கு என்ன வம்பு என கண்டும் காணாமலும் செல்லும் இதே சமூகத்தில் தான், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்கள் தானே, அவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே என இறக்கம் கொண்டு அத்தகைய மன நிலையில் இருந்த ஒருவருக்கு மயிலாடுதுறையை சேர்ந்த சமூக ஆர்வலர் செய்த செயல் பலரிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் தான் சமூக சேவகர் பாரதி மோகன். இவர் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரியும் நபர்களை மீட்டு, காப்பகம் அல்லது அவர்களின் குடும்பத்திடம் ஒப்படைப்பதை சேவையாக செய்து வருகிறார்.
இந்நிலையில் பூம்புகார் பகுதியில் கடந்த 4 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிவதாக பாரதி மோகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்று அந்நபரை சந்தித்த பாரதி மோகன், தன்னால் முயன்ற உதவிகளை செய்து, அந்நபரை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தார், சமூக ஆர்வலர் பாரதிமோகனை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த இளைஞர் கடலூர் மாவட்டம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த 24 வயதாகும் கார்த்தி என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
பின்னர் கார்த்தியின் குடும்பத்தார் உடனடியாக பூம்புகார் பகுதிக்கு விரைந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த மகனை கண்ட அவரின் தாய், ஏ சாமி எங்கள தவிக்க விட்டு போய்ட்டியே என ஆனந்த கண்ணீர் வடித்தது காண்போரை கலங்கடித்தது.
பின்னர் கார்த்திற்க்கு முடிவெட்டி அவரை குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார் பாரதி மோகன். மேலும், தன்னால் முடிந்த தொகையையும் கார்த்திக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார் சமூக ஆர்வலர் பாரதி மோகன். அவரது இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.