எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாசம் காட்டவும், அக்கறையாக பார்த்துக் கொள்ளவும் தாயை மிஞ்சும் சக்தி எதுவும் இல்லை என்று நினைக்கும் காலகட்டத்தின் மத்தியில்... அண்மையில் மியான்மரில் நடந்த நிலநடுக்கத்தின் போது மருத்துவமனையில் இருந்த பச்சிளங் குழந்தைகளை தன்னலம் பாராமலும் செவிலியர்கள் மார்போடு கட்டி அணைத்து காப்பாற்றிய காட்சி பலரையும் சிலிர்க்க வைத்தது. இதுபோன்ற தன்னலமற்ற, மனதை கொள்ளை கொள்ளும் செவிலியர்களின் சேவையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
"உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று அப்பால்நாற் கூற்றே மருந்து" என்ற திருக்குறளுக்குகேற்ப உலகம் உற்று பார்க்க வைக்கும் கருணை உள்ளம் கொண்டவர்கள் தான் செவிலியர்கள்.
பொதுவாக ஒரு மனிதருக்கு பாசம் காட்டவும் அக்கறைப்படவும் நமது கண்களுக்கு தெரிவது உறவினர்கள் மட்டும் தான். ஆனால் அவர்களையும் தாண்டி சக மனிதர்களிடம் அக்கறை காட்டி மனித நேயங்களுடன் நடக்கும் செவிலியர்கள் எத்தனை பேரின் நினைவுகளில் வருகிறார்கள்?... அதிலும் கொரோனா காலகட்டங்களில் செவிலியர்கள் ஆற்றிய சேவைகளை மறக்க முடியாது.
ஒரு நோயாளியின் கண்ணீரை துடைபவர்களாகவும், மலை போல் குவிந்து கிடக்கும் கவலைகளுக்கு மத்தியில் கடுகளவில் ஒரு வார்த்தையால் அவர்களுக்குத் தைரியத்தை கொடுபவர்களாகவும் இருக்கிறவர்கள் தான் செவிலியர்கள்... ஒரு சிரிப்பால் உயிருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் செவிலியர்களின் சேவை ஈடுகட்ட முடியாத ஒன்றாகும்.
மியான்மர் நிலநடுக்கத்தின் போது மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர், கட்டிடங்கள் ஆடி உயிர் பயத்தை காட்டும் நிலையிலும் கூட தனது உயிரைப்பற்றி யோசிக்காமல் தொட்டியில் இருந்த குழந்தையை அவரால் முடிந்த எல்லா ஆற்றலையும் செலுத்தி பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தார். இந்தச் செயல் ஒரு தனிப்பட்ட மனிதரின் மனிதத்துவத்தை மட்டும் காட்டாமல் உலகெங்கும் செயல்படும் ஆயிரக்கணக்கான செவிலியர்களின் தினசரி போராட்டத்தின் சின்னமாகவும் விளங்குகிறது.
ஒரு நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கும் போது அவரை நோயாளியாக பார்க்காமல் தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்து சிகிச்சை அளிப்பதாக தெரிவிக்கும் செவிலியர் ஜாய் கேசியா, பல இன்னல்களை தாண்டி மக்களுக்கு சேவை செய்து வருவதாக தெரிவித்தார்.