மறைந்தார் மனோஜ் பாரதிராஜா (1976-2025) ..! திரைத்துறையினர் அதிர்ச்சி..!

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா தனது 48வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜா - சந்திரலீலாவதி தம்பதிக்கு கடந்த 1976ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர் மனோஜ் பாரதிராஜா. தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான பாரதிராஜா பல நடிகர், நடிகைகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். 

இதேபோல் தனது மகனான மனோஜை, தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் செய்ய பிரம்மாண்ட முறையில் தாஜ்மஹால் என்ற திரைப்படத்தை இயக்கினர்.  கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான`தாஜ் மஹால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் ரியா சென்னுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில்,  ஏச்சி எலுமிச்சி பாடலை மனோஜ் பாரதிராஜா பாடி அசத்தியிருந்தார். படத்தில் பின்னணி இசை ஏ.ஆர்.ரகுமானால் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல்களும் அனைவரையும் ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய சமுத்திரம், கடல் பூக்கள் எனும் படத்திலும் நடித்திருந்தார் மனோஜ். 

இதனைத்தொடர்ந்து ஈரநிலா, சாதுரியன், மகா நடிகன், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களிலும் மனோஜ் பாரதிராஜா நடித்திருந்த நிலையில் சிம்பு நடித்த மாநாடு படத்திலும் ஜான் மேத்யூ எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது போல் விருமன் படத்திலும் முத்துக்குட்டி எனும் ரோலில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். இவர் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இவர் கடைசியாக கடந்தாண்டு வெளியான `ஸ்நேக் அன்ட் லாடர்ஸ்' வெப் சீரிஸில் நடித்து கலக்கினார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர் மணி ரத்னத்திடம் `பாம்பே' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் மனோஜ் பாரதிராஜா.

ஈரநிலம் என்ற படத்தில் நடித்தபோது அதில் கதாநாயகியாக நடித்து நடிகை நந்திதா உடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. 

இதனிடையே, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது சேத்துபட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென  உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மனோஜ் பாரதிராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Night
Day