எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஓடைகளை சுயலாபத்திற்காக ஆக்கிரமித்து வரும் சிலரால், மழைக் காலங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம் விரிவாக...
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒவ்வொரு ஆண்டும் தூர் வாரி முறையாக பராமரித்தால் மட்டுமே மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு போன்றவற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். சென்னையை பொறுத்த வரை அதிக அளவில் கட்டிடங்களாக காட்சியளிப்பதால், சிறிய மழை பெய்தாலே தண்ணீர் வெளியேற முடியாமல், குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கும் சூழல் உள்ளது.
இப்படி இருக்கையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளை ஆக்கிரமித்து, சுயலாபத்திற்காக சிலர் அராஜக போக்கில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குரோம்பேட்டை, பல்லாவரம் சட்டமன்ற தொகுதி தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சூர்யா அவென்யூ பிரதான சாலையில் மூன்று தெருக்கள், ஓர் குறுக்கு தெரு உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா அவென்யூ முதல் குறுக்கு தெருவின், தெற்கு எல்லை பகுதியில் சுமார் 8 அடி நீளமுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், மழை நீர் ஓடை அமைந்திருந்தது. மழைக்காலங்களில் இந்த ஓடை வழியே உபரி நீர் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று புத்தேரிக்கு வந்தடைகிறது.
8 அடி நீளமுள்ள இந்த ஓடையை ஒட்டிய வரதன் நகரில் காலி மனையை விற்பனை செய்து வரும் சிலர், ஓடையை ஆக்கிரமித்து, ஓடையின் மீது விளையாட்டு திடல் அமைத்து வியாபாரம் செய்வதுடன், சூர்யா அவென்யூ முதல் குறுக்கு தெரு வழியாக பாதை அமைத்து, காலி மனையை விற்பனை செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மழைநீர் ஓடையை ஆக்கிரமித்து அடைக்கப்பட்டதால், இங்கு தேங்கும் மழை நீர், செல்வதற்கான வழிதடம் இல்லாமல், குடியிருப்பு பகுதியில் புகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, பாதாள சாக்கடை வரி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வரும் தங்களுக்கு, மழை நீர் செல்வதற்கான வடிகால் பாதையையும் நகராட்சி நிர்வாகம் முறையாக அமைத்து கொடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பாளர்கள் மீது, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியர், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னையை பொறுத்தவரை மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழலில், இது போன்ற ஓடைகளை ஆக்கிரமித்து, அராஜக போக்கில் ஈடுபடுவதால், எதிர்காலத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூர்யா அவென்யூ பகுதியும், மழை நீரில் தத்தளிக்கும் சூழலுக்கு தள்ளப்படும் என குடியிருப்பு வாசிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஓடையை மீட்டு, மீண்டும் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கான பாதையை உருவாக்கி தர வேண்டும் என்பதே, தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சூர்யா அவென்யூ பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.