மாட்டுச்சந்தையில் திமுக அடாவடி வசூல்... தலைமை வழி தவறா உடன்பிறப்புகள்.....

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுகவினர் என்றாலே ஊழல்கள் செய்வதற்கும் அதிலும் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் கை தேர்ந்தவர்கள். அதனை தொடர்ந்து நிரூபிக்கும் வகையில் மணப்பாறை மாட்டுச்சந்தையில் நூதன முறையில் திமுகவினர் பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளையும் வியாபாரிகளையும் துன்புறுத்தும் திமுகவினரின் அடாவடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....  

மணப்பாறை என்றாலே நம் நினைவுக்கு வருவது சுவையான முறுக்கும் பாரம்பரிய மாட்டு சந்தையும்தான். அத்தகைய மாட்டுச் சந்தையின் பெருமையை சுட்டிக்காட்டும் வகையில், மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி என்ற பழைய திரைப்பாடல்  கூட உள்ளது. இன்றளவு மாநில அளவில் புகழ் பெற்ற இந்த மணப்பாறை மாட்டுச் சந்தையில்தான் திமுகவினரின் அராஜகம் தலைவிரித்து ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சந்தையை திமுகவைச் சேர்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் லட்சுமியின் மகன்கள் பராமரித்து வரும் நிலையில், நகராட்சி நிர்ணயித்த 100 ரூபாய் கட்டணத்திற்குப் பதிலாக  150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், விற்பனைக்குப் பிறகு ஒரு மாட்டிற்கு 500 முதல் 800 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அத்துடன் சரக்கு வாகனங்களில்  மாடுகளை ஏற்றிச் செல்லும் போது 5,000 முதல் 8,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மாட்டுச்சந்தையில் மாடுகள் வருவதற்கு மட்டும் நுழைவு கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் எடுத்துவிட்டு தற்போது  விற்பனையாகி செல்லும் மாடுகளுக்கும் ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்வதாக விவசாயிகளும் வியாபாரிகளும் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று மாடுகளுடன் சரக்கு வாகனங்களை நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதே போல திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டிலும் திமுகவினர் இரண்டு மடங்காக நுழைவு கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கடந்த வாரம் மீன் வியாபாரிகள் கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தலைமையையும் தலைவர்களையும் பின்பற்றி தடம் மாறாமல் கொள்கையை கடைப்பிடிப்பவர்களே உண்மையான தொண்டர்கள் ஆவார்கள். அந்த வகையில் ஊழலுக்கும் அடாவடி பண வசூலுக்கும் பெயர் பெற்ற திமுகவின் கொள்கையை, மணப்பாறை மாட்டுச் சந்தையில் கட்சி உடன்பிறப்புகள் உறுதிபட கடைப்பிடித்து வருகின்றனர் என்றே சொல்லலாம்.

varient
Night
Day