எழுத்தின் அளவு: அ+ அ- அ
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் கட்டப்படும் மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளதால் மாலை கட்டும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். எதிர்காலங்களில் மாணிக்க மாலை தொழில் பெருக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்....
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தட்டு, ஸ்ரீவல்லிபுதூர் பால்கோவா, பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்கிடி சேலை, நாகர்கோவில் வடசேரியில் கோவில் நகைகள் மற்றும் ஈத்தாமொழி தேங்காய், என தமிழகத்தில் பல பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
அந்த வகையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் கட்டப்பட்டு வரும் மாணிக்க மாலைகளுக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளதால் மலர் சந்தையில் உள்ள பூக்கட்டும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக பாரம்பரியமாக கட்டப்பட்டு வரும் மாணிக்க மாலை தற்போது ஆறு தலைமுறைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சிவப்பு, வெள்ளை அரளி பூக்கள் மற்றும் வெற்றிலைகள் நார்கள், நொச்சி இலைகள் கொண்டு தனித்துவமாக மாணிக்க மாலைகள் கட்டப்படுகிறது. ஒரு மாலை கட்ட 4 மணி நேரம் எடுப்பதாக தெரிவிக்கும் தொழிலாளர்கள், இந்த மாணிக்க மாலைகள் திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் மாணிக்க மாலையை கண்டு அதிர்ந்து போனதாக தெரிவிக்கும் தொழிலாளர்கள், நுட்பமான வேலைப்பாடுகளுடன் கைத்தொழிலாக செய்து வரும் மாணிக்க மாலைகளுக்கு தற்போது தோவாளை மாணிக்க மாலை என புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாணிக்க மாலை தொழில் வளர்ச்சியடைய உதவிய மத்திய ஜவுளித்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
6வது தலைமுறையோடு மாணிக்க மாலை தொழில் அழிந்து போகக் கூடாது என தெரிவிக்கும் தொழிலாளர்கள், தற்போதுள்ள கலை கல்லூரிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சாவூர் தட்டுக்கு கொடுத்த முக்கியதுவம், மாணிக்க மாலைகளுக்கு அரசு தரப்பில் செய்து தர வேண்டும் என மாணிக்க மாலை கட்டும் பெண் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.