மின்சாரம் பாய்ந்து துடிதுடித்த சிறுவன்... கடவுளாய் வந்து காப்பாற்றிய இளைஞர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அரும்பாக்கத்தில் மழை நீரில் நடந்து சென்ற 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனை காப்பாற்றியுள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் சிறுவனுக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய அதிர்ச்சி காட்சிகள்தான் இவை...

சென்னை அரும்பாக்கம் முத்தாட்சி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராபர்ட். அவரது 9 வயது மகன் அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில், கடந்த 16-ம் தேதி சென்னையில் பரவலாக கனமழை பெய்தது. இதில் வழக்கம் போல் பல தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

அதேபோல் அரும்பாக்கம் மங்கள் நகர் 1-வது தெருவிலும் தண்ணீர் தேங்கியிருக்க, சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றிப் பெட்டியில் மின் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத ராபர்ட்டின் மகன் வழக்கம் போல் பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி தேங்கிய மழை நீரிலேயே மயங்கி விழுந்தான்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், சிறுவன் தண்ணீரில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய அவர், அந்த சிறுவனைத் தூக்கிச் சென்று முதலுதவி செய்துள்ளார். பின்னர் விரைவாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தக்க நேரத்தில் இளைஞர் செய்த உதவியால் சிறிய காயத்துடன் சிறுவன் உயிர் பிழைத்துள்ளான். இந்த பகுதியில் ஒவ்வொரு முறையும் மழை பெய்தாலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதாகவும், மின்மாற்றி பெட்டியும் ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகவும் சிறுவனைக் காப்பாற்றிய கண்ணன் தெரிவித்துள்ளார். 

கடந்த பல ஆண்டுகளாக மழை நீர் இப்பகுதியில் தேங்கி நிற்பதாகவும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - மழை நீர் வடிகால் கால்வாய் அமைத்து எந்த பயனும் இல்லை என்று கொந்தளிக்கின்றனர் அரும்பாக்கம் மக்கள்.
மின்சாரம் தாக்கிய தன் மகனை காப்பாற்றிய கண்ணனுக்கு நன்றி தெரிவித்துள்ள சிறுவனின் தந்தை ராபர்ட், சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் இந்த அசம்பாவிதம் நேரிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் துடிதுடித்ததைப் பார்த்த இளைஞர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.அந்த இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

அதேநேரத்தில், ஒரு மழைக்கே தெருக்களில் தண்ணீர் தேங்கும் அவலத்திற்கு சென்னை மாநகராட்சியும், மின்கசிவிற்கு மின்வாரியமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றும், சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Night
Day