மீண்டும் சர்ச்சையில் பொன்முடி பேச்சு... கடும் நடவடிக்கைக்கு தயக்கம் ஏன்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

முதலமைச்சரின் தூக்கத்தை கெடுத்த சர்ச்சை நாயகன் அமைச்சர் பொன்முடி பெண்களையும், இந்து மதத்தையும் மீண்டும் இழிவுப்படுத்தி கொச்சையாக பேசிய வீடியோ வைரலாகிய நிலையில், பல தரப்பிலிருந்தும் பொன்முடிக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதுபற்றிய செய்தி தொகுப்பினை இங்கு பார்க்கலாம்... 

திமுக விளம்பர அரசில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல கொடுமைகள் தினமும் அரங்கேறி வரும் சூழலில் சர்ச்சை நாயகன் அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெண்களை முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு இருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக நீதி அரசு, மகளிருக்கான திட்டங்களை கொடுக்கும் அரசு, மகளிரை பாதுகாக்கும் அரசு என திமுக அரசு தொடர்ந்து தங்களை விளம்பரபடுத்தி மட்டுமே வருகிறதே தவிர அக்கட்சியின் தலைவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில் திமுகவின் சர்ச்சை நாயகனாக விளங்கும் அமைச்சர் பொன்முடி கடந்த சில மாதங்களுக்கு முன் இலவச பேருந்தில் பெண்கள் பயணம் செய்வதை ஓசி பயணம் என்று தரக்குறைவாக பேசியிருந்தார்

இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சம்பிரதாயத்திற்கு தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்து பொன்முடி மன்னிப்பு கேட்டதாக விமர்சனம் எழுந்தது. ரேஷன்கடை ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்ற பொன்முடி பெண்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் முக்கியத்துவம் என்று பேசிக் கொண்டே ஒன்றியக்குழு உறுப்பினரைப் பார்த்து ""ஏம்மா,,. நீ எஸ்சி.தானே.."" என்று பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நிலையிலும், அதே ஆண்டில் அரசு நிகழ்ச்சில் ஒன்றில் பொன்முடி பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் இருந்து பெண் ஒருவர் குறுக்கிட்டு தனது குறைகளை கூற முயன்றார். அப்போது, ""வாயை மூடிக்கிட்டு சும்மா ஒக்காருமா"" என்று ஒருமையில் அதட்டிய பொன்முடி, அத்தோடு நில்லாமல் ""உன் வூட்டுக்காரர் வந்துருக்காரா"" என்று கேள்வி எழுப்ப, அதற்கு அவர் போய்விட்டார் (காலமாகி விட்டார்) என்று அந்த பெண் பதிலளிக்க ""போயிட்டாரா பாவம் நல்லவேளை"" என்று நக்கலாக சிரித்து பேசியதாக பெண்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் 2023 டிசம்பர் 21-ந் தேதி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டநிலையில், அமைச்சர் பதவியை இழந்தார். 2024 மார்ச் 11-ந் தேதி இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் மீண்டும் அமைச்சரானார். இடைப்பட்ட நாட்களில் பொன்முடியின் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட அவதூறாக வரவில்லை. ஆனால் அமைச்சர் பதவி கிடைத்த நாள் முதல் மீண்டும் தன் வாயை வாடகைக்கு விடும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார் பொன்முடி.

அதன் உச்சமாகத் தான் கடந்த 6-ந் தேதி சென்னையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற நிகழச்சியில் பேசிய அவர், விலைமாதுவும், வாடிக்கையாளரும் பேசிக்கொள்ளும் ஒரு உரையாடலை, சைவம், வைணவத்துடன் ஒப்பிட்டு பேசி, புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என பலரும் இந்த வீடியோவை டேக் செய்து இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் கண்டனம் வலுத்த நிலையில் பொன்முடி வகித்து வந்த கட்சி பதவியான துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மட்டும் நீக்கி திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் பொன்முடி, இதுபோன்று பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வரும் நிலையில், அவர் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என மகளிர் அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் திமுக கட்சி தலைமையோ பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், வெறும் கண்துடைப்பிற்காக பொன்முடியை கட்சி பதவியிலிருந்து மட்டுமே நீக்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. 

பொன்முடி மட்டும் தான் இப்படி பேசுகிறாரா என்றால் இல்லை... திமுகவில் முக்கிய பதவிகளில் இருக்கும் பலரும் இப்படி பெண்களையும், இந்து மதத்தையும், மாற்றுதிறனாளிகளையும் தொடர்ந்து அவதூறாக பேசுவது தொடர்கதையாகி வருவதாக பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தி.மு.க., கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சிகளை சாடுவதாக நினைத்துக் கொண்டு, மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், தமக்கும் பதவி பறிபோகுமோ என்ற அச்சத்திலும், தேர்தல் வரவுள்ளதை மனதில் வைத்தும், மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்டது வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டுமே என விமர்சனம் எழுந்துள்ளது. 

தொடர்ந்து அவதூறு வார்த்தைகளை அள்ளி வீசி வரும் திமுகவினருக்கு, மக்கள்தான் பாடம் புகட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது. 

Night
Day