எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது நம்மில் பலரது சிறுவயது கனவாக இருக்கும். அந்த கனவை முதல் முயற்சியிலேயே நனவாக்கியுள்ளார் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவர். தமிழக அளவில் 5வது இடம் பிடித்து சாதனை படைத்த மாணவர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவர் ஸ்ரீரசத்... இவர், யுபிஎஸ்சி தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 52வது இடமும், தமிழக அளவில் 5வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீரசத்தின் தந்தை ராம்பிரசாத் கணினி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ஸ்ரீரசத் தனது 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி படிப்பை விவேகானந்தா வித்யாலயா பள்ளிலும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்ஃபேன்ட் ஜீசஸ் பள்ளியிலும், 9 முதல் பிளஸ் 2 வரை கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் பயின்றுள்ளார். தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஸ்ரீரசத், டெல்லி பல்கலைகழத்தில் பி.ஏ. பொருளாதாரம் பயின்றுள்ளார்.
பின்னர் அங்கேயே கோச்சிங் சென்டரில் சேர்ந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தன்னை தயார்படுத்தியுள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ஸ்ரீரசத், தனது சிறுவயது கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும் தனக்கு நிதித்துறையில் ஆர்வமுள்ளதாக கூறிய அவர், எந்த துறை கிடைத்தாலும் சிறப்பாக செயல்படுவேன் என தெரிவித்துள்ளார்.
மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதை கொண்டாடிய அவரது தந்தை ராம்பிரசாத், தனது மகன் சிறுவயது முதல் படிப்பில் ஆர்வம் செலுத்தியதாகவும், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை படித்ததாகவும் கூறினார்.
தனது மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதாக தாய் லட்சுமி தெரிவித்தார். முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று கனவை நனவாக்கியுள்ளார் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.