முன்கூட்டியே தொடங்கிய மாம்பழ சீசன்... வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி...

எழுத்தின் அளவு: அ+ அ-

வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு, பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே மாங்காய் மற்றும் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முக்கனிகளில் ஒன்றான மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...

மாங்கனி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி உண்ணுவது வாடிக்கை. அந்த வகையில் முக்கனி பழமான மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது.

வழக்கமாக மார்ச் மாதம் கடைசியில் இருந்து ஜூன் மாதம் வரை மாம்பழம் மற்றும் மாங்காய் சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாங்காய் மற்றும் மாம்பழ சீசன் தொடங்கி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில், இந்த ஆண்டு மாங்காய் வரத்து அதிகமாக வருவதால் வியாபாரிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரக்கடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கோவையில் இருந்து துபாய், மஸ்கட், சவுதி போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கோவையில் நிர்ணயிக்கப்படும் விலையைதான், இந்தியா முழுவதும் உள்ள வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் 6 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என கூறுகின்றனர் வியாபாரிகள்.

குறிப்பாக மாம்பழங்களை பழுக்க வைப்பதற்காக எந்தவிதமான கற்களும் பயன்படுத்துவதில்லை என்றும் அதனைப் பழுக்க வைப்பதற்காக அரசாங்கம் அறிவித்த எத்தரின் கசுவை வைத்து, மாங்காய்களை மாம்பழமாக மாற்றுவதனால் எந்த விதமான பாதிப்பும் இருக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

அது மட்டுமில்லாமல் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றும், தற்போது பழமண்டிகளில், மொத்தமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை மாம்பழங்கள் தினசரி விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் ஒரு மாங்காய் விளைச்சல் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ள விவசாயிகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உற்பத்தி குறைவாக இருப்பதாகவும் ,தோட்டத்தில் பூச்சிகள் தொல்லை அதிகளவில் இருப்பதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்தாண்டு செலவுகள் அதிகமாக இருப்பதாகவும், உற்பத்தி குறைவாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தோடு, இயற்கை தங்களை காப்பாற்றினால் மட்டுமே, விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

மா விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள போதிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day