மோசடி மன்னன் மெகுல் சோக்ஷி கைது... இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா!

எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி, கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப்பின் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சோக்‌ஷியை பெல்ஜியம் போலீசார் கைது செய்திருந்தாலும் அவரை நாடு கடத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்..

பலஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கல்தா கொடுத்துவிட்டு நாட்டைவிட்டே எஸ்கேப் ஆன நீரவ் மோடியையும் மெகுல் சோக்‌ஷியையும் அவ்வளவு எளிதாக மக்கள் மறந்திருக்க வாய்ப்பு இல்லை. 

இந்தியாவின் மிகப்பெரிய வைரவியாபாரியான நீரவ் மோடியின் மருமகன் தான் இந்த மெகுல் சோக்‌ஷி. கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான மெகுல் சோக்‌ஷி, மோசடி ஆவணங்கள் மூலம் நாட்டின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களின் ஒப்பந்தக் கடிதங்கள் மற்றும் வெளிநாட்டு கடன் கடிதங்கள் ஆகியவற்றைப் மோசடியாக பயன்படுத்தியதாகவும் மெகுல் சோக்‌ஷி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் மெகுல் சோக்‌ஷிக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மற்றும் 2021ஆம் ஆண்டு இரண்டு பிடி வாரண்ட்களும் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்த உடனேயே கடந்த 2018ஆம் ஆண்டு நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி நாட்டைவிட்டு தப்பிச் சென்றனர். 

முதலில் கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து மெகுல் சோக்‌ஷியை Fugitive Economic Offender - அதாவது தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என அறிவித்து அவரை எப்படியாவது கைது செய்து இந்தியா அழைத்து வர வேண்டும் என பெரும் முயற்சிகளை மேற்கொண்டது மத்திய அரசு.  

இந்த நிலையில் டொமினிகன் குடியரசில் கடந்த 2021-ம் ஆண்டில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக சோக்‌ஷி கைது செய்யப்பட்டார். அப்போது சோக்‌ஷியை காவலில் எடுக்க சிபிஐ குழு கரீபியன் நாட்டிற்கு விரைந்தது. ஆனால், சோக்ஸியின் வழக்கறிஞர்கள், சிகிச்சைக்காக ஆன்டிகுவாவுக்கு அவர் திரும்ப வேண்டும் என்றும், பின்னர் விசாரணையை எதிர்கொள்ள மீண்டும் திரும்பி வருவார் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து 51 நாட்கள் சிறையில் இருந்த பிறகு, சோக்‌ஷிக்கு பிரிட்டிஷ் ராணியின் தனியுரிமை கவுன்சிலிடமிருந்து நிவாரணம் கிடைத்தது. மீண்டும் சோக்‌ஷி ஆன்டிகுவாவுக்கு திரும்பினார். பின்னர், டொமினிகன் குடியரசில் அவர் மீதான சட்டவிரோத நுழைவு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

இதையடுத்து சோக்‌ஷி எங்கு இருக்கிறார் என்ற விவரம் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தது. பிறகு டொமினிக்கா நாட்டில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பெல்ஜியத்தில் அண்ட்வெர்ப் நகரில் தனது குடும்பத்துடன் சோக்‌ஷி வசித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. 

இந்தநிலையில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக சிக்காமல் இந்தியாவுக்கு தண்ணீர் காட்டி வந்த வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷி பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் மெகுல் சோக்‌ஷி பெல்ஜியம் குடியுரிமை பெற்றிருப்பதால், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது மெகுல் சோக்‌ஷி பெல்ஜியம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் தனது உடல் நிலையை காரணம் காட்டி உடனடியாக ஜாமீன் பெறவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை பெறுவதற்காக சோக்‌ஷி போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், தான் இந்தியா மற்றும் ஆன்டிகுவாவின் குடிமகன் என்பதையும் மறைத்தே சோக்‌ஷி பெல்ஜியம் நாட்டின் குடியுரிமையை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் மெகுல் சோக்‌ஷியை எப்படியாவது இந்தியா அழைத்து வரும் முயற்சியில் சிபிஐ இறங்கியுள்ளது. ஏற்கெனவே 2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி தவ்ஹிர் ராணா பலகட்ட சட்டம் போராட்டங்களுக்கு பிறகு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் தற்போது மெகுல் சோக்‌ஷியும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அது பாஜகவுக்கு சாதகமாகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day