எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞரை பெண் மருத்துவர் தட்டிகேட்டதால், அவரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜிம் பராமரிப்பாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
மதுரை மாநகர் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவருக்கு சொந்தமான உடற்பயிற்சிகூடம் அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. உரிமையாளர் வசந்தகுமார் கேரளாவில் உள்ள நிலையில், அவரது சகோதரர் கார்த்திகேயன் பராமரித்து வருகிறார். இந்த உடற்பயிற்சி கூடத்தில் தினசரி 250க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் உடற்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் அந்த உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 9ஆம் தேதி பெண் மருத்துவர் ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அதே ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த சிலம்பரசன் என்ற இளைஞர் உடற்பயிற்சி செய்துகொண்டே பெண் மருத்துவரை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதைப் பார்த்த பெண் மருத்துவர், சிலம்பரசனிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர் வாக்குவாதம் செய்ததோடு பெண் மருத்துவரை ஆபாசமாகவும் திட்டி மிரட்டியுள்ளார். பின்னர் உடற்பயிற்சி மையத்தில் இருந்த CCTV கேமராவை ஆய்வு செய்த போது நடந்தது தெரியவர, சிலம்பரன் வீடியோ எடுத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளார். இதனால் பெண் மருத்துவர் புகார் அளிக்க விருப்பமில்லை என கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் உடற்பயிற்சி கூடத்தில் தனது பராமரிப்பில் உள்ள இடத்தில் இம்மாதிரியான அசம்பாவிதம் நடந்து விட்டதே என்று எண்ணி, ஆவேசமடைந்த ஜிம் பராமரிப்பாளர் கார்த்திகேயன், சிலம்பரசன் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சிலம்பரசன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரின் செல்போன் மற்றும் உடற்பயிற்சி மைய சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
புகாருக்குள்ளான சிலம்பரசன் பெண் மருத்துவரை மட்டும் வீடியோ பதிவு செய்துள்ளாரா? உடற்பயிற்சி செய்தபோது வேறு பெண்களையும் வீடியோ பதிவு செய்துள்ளாரா? என்பது குறித்து செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.