எழுத்தின் அளவு: அ+ அ- அ
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் கம்பன் கால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலம் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலைக்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்தூர், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய் 44 கிலோ மீட்டர் நீளம் உடையது. இந்த கால்வாய் வழியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதனால், சுமார் 22 ஆயிரத்து 235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆனால் மழைக்காலங்களில் இந்த கால்வாயில் தண்ணீர் ஓடும் போது, பள்ளூர், மணியாச்சி, கொட்டவாக்கம், மதுரமங்கலம், காந்தூர், ஏகணாபுரம், சோகண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க நபார்டு வங்கி நிதியுதவியுடன் கடந்த 2022- 23ம் நிதி ஆண்டில் 4 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் கம்பன் கால்வாய் குறுக்கே பாலம் கட்டுவதற்கு, ஊரக வளர்ச்சித் துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில், சென்னையின் இரண்டாவது சர்வதேச பசுமை விமான நிலையம், பரந்தூரில் அமைய உள்ளதை தொடர்ந்து 20 கிராமங்களில், 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், 3,500 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்களாகும். மீதம், தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளாக உள்ளன. இதுதவிர, கம்பன் கால்வாய் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண்ணை கொட்டி தூர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 4 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் கட்டிய பாலம் வீணாகும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவை சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் கருணாநிதி மற்றும் திமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் நெருக்கடியால் தான் பாலம் கட்டப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏகனாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் ஊராட்சி மன்ற கட்டிடம், ரேஷன் கடை உள்ளிட்ட பல அரசு கட்டிடங்கள் மிகவும் சிதிலுமடைந்துள்ளது. அதை புனரமைக்க எந்த விதமான நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் விமான நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டி அந்தப் பணத்தை கொள்ளையடிக்க திமுகவினர் திட்டம் போட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிதியை, வேறு ஏதேனும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் ஒதுக்கீடு செய்திருக்கலாம் எனவும் புலம்புகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாலத்தை ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்த்துள்ளனர்.