எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் மழை காலங்களில் லேட்நைட் டின்னர், ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் பிரியாணி, பிரைட் ரைஸ் போன்ற உணவினை சூடாக உட்கொள்ள பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு உட்கொள்ளும் உணவு வகைகள், உடல் நலத்திற்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது. அதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்து மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
காலை உணவினை தவிர்க்காமல் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல இரவு உணவினை தவிர்க்காமல் அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. தற்பொழுது உள்ள பணிச்சூழல்களில் இரவு நேரங்களில், நேரம் கிடைப்பதால் மக்கள் நள்ளிரவு நேரத்தில் உணவகத்திற்கு சென்று பிரியாணி, ப்ரைட் ரைஸ் போன்ற உணவினை உட்கொள்வது வாடிக்கையாகி உள்ளது.
குறைவாக சாப்பிட வேண்டிய இரவு வேளையில் அதிகப்படியான உணவினை உட்கொள்வதால் தூக்கமின்மை போன்ற பாதிப்பு ஏற்பட்டு, சர்க்கரை வியாதி, உடல் எடை அதிகரிப்பு போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் நண்பர்களோடு ஒன்றிணைந்து நள்ளிரவு வேலைகளில் சாப்பிடுவது இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அது உடலுக்கு உகந்தது அல்ல என்றே கூறலாம். சூரிய ஒளியில் இருந்து மனிதர்களது உணவு செரிமானத்திற்கு கிடைக்கக்கூடிய சத்துக்களானது, சூரியன் மறைந்த பிறகு கிடைப்பதில்லை. எனவே நள்ளிரவு வேளைகளில் பிரியாணி, ப்ரைட் ரைஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவினை உட்கொள்வதால் சர்க்கரை வியாதி, உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் போன்ற வியாதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
நன்றாக உறங்கி இளைப்பாற வேண்டிய இரவு நேரத்தில் அதிகப்படியான உணவினை எடுத்துக்கொண்டு செரிமான உறுப்பிற்கு பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவினை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். காலையில் அரசரைப் போலவும், மதிய வேளையில் இளவரசரை போலவும், இரவில் யாசகன் போலவும் உணவு பழக்கத்தினை வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
அதிக அளவு புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு இருக்கக்கூடிய உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும் - சாப்பிட்ட உடனே தூங்கச் செல்வதால் உடலுக்கு உகந்தது அல்ல - ஆகவே மருத்துவர்களின் அறிவுறுத்தலை கடைப்பிடித்து, இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவினை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழமுடியும் என்பதே நிதர்சனம்.