வங்கியில் 70 சவரன் நகைகள் மாயம் - துணை மேலாளர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைத்த நகைகளை எடுத்து ஆன்லைனில் சூதாடி மோசடியில் ஈடுபட்ட துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 70 சவரன் நகையை வங்கி லாக்கரில் இருந்து திருடி, வசமாக சிக்கியது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் கிராமத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கிளை மேலாளராக ஸ்ரீராமும், துணை மேலாளராக கணேஷ் உள்ளிட்ட ஆறு பேர் பணியாற்றி வருகின்றனர்...

இந்நிலையில், அந்த வங்கியில் அதிகாரிகள் தலைமையில் தணிக்கை மேற்கொள்ளப்பட்ட போது வாடிக்கையாளர்களின் 70 சவரன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அடகு வைத்ததற்கான வரவு மட்டும் வங்கி பதிவேட்டில் ஏற்றம் செய்யப்பட்டிருந்தது.அதன்படி, 9 பொட்டலத்தில் இருந்த நகைகள் மாயமானது குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்..

இதில் துணை மேலாளர் கணேஷ் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வங்கியின் உயர் அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் கணேஷை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 70 சவரன் நகைகளை வங்கி லாக்கரில் இருந்து திருடியது தெரிய வந்தது...

தொடந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த கணேஷ் அதில் பல லட்ச ரூபாயை இழந்ததாகவும், தொடர்ந்து சூதாட பணம் இல்லாததால் வங்கி லாக்கரில் இருந்த 70 சவரன் நகைகளை எடுத்து சென்று சூதாடி மோசடி செய்ததும் தெரிய வந்தது....

இதனையடுத்து, துணை மேலாளர் கணேஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியதால் வங்கியில் நகை அடகு வைத்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கிளை மேலாளர் கவனக்குறைவால் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துணை மேலாளர் நகையை திருடிய சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

பல லட்சம் மோசடி செய்த துணை மேலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, நகைகளை இழந்த அனைவருக்கும் உடனடியாக நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது...

Night
Day