வரதட்சணையாக இருட்டுக்கடை... மருமகன் மீது உரிமையாளர் புகார்... மறுக்கும் மாமனார்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரட்சணை கொடுமை செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுப்பதாக மருமகன் குடும்பத்தினர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரதட்சணையாக புகழ்பெற்ற இருட்டுக்கடையை கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், என்னதான் நடக்கிறது இருட்டுக்கடையில்..... இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

திருநெல்வேலி என்றாலே நெல்லையப்பரும் காந்திமதி அம்பாளையும் அடுத்து அனைவரின் நினைவுக்கும் வருவது இருட்டுக்கடை அல்வாதான். தாமிரபரணி  தண்ணீரால் தயாரிக்கப்படுவதால் இந்த அல்வாவின் சுவையே தனிதான். இப்படி நெல்லைக்கு பெயர் பெற்றுத் தந்த இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் குடும்பத்தில்தான் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இருட்டுக்கடை அல்வா கடையை நடத்தி வரும் கவிதா சிங்கின் மகள்தான் கனிஷ்கா. எம்பிஏ பட்டதாரியான இவருக்கும் கோயமுத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தச்சநல்லூரில் திருமணம் நடந்தது.

ஆனால், தாலி கட்டிய உடனேயே மருமகன் பலராம் சிங்கும் அவரது தந்தை யுவராஜும்  இருட்டுக்கடையை எழுதித் தாருங்கள், இல்லையென்றால் உங்கள் பெண்ணை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என மேடையிலேயே கூறியதாக குற்றம் சாட்டுகிறார் கவிதா சிங். 

பின்னர் இப்போதுதான் திருமணம் முடிந்துள்ளது, விருந்து முடிந்து உறவினர்கள் சென்ற பின் பேசிக் கொள்ளலாம் எனக் கேட்டுக் கொண்டதால் மணமகன் மேடைக்கு வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறுகிறார் கவிதா சிங்...

இதனையடுத்து திருமணம் முடிந்த கையோடு பல்ராம் சிங் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு தனக்கு ஜாக்குவார் சொகுசு கார் வேண்டும் என்று மனைவியிடம் கூறவே சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட காரை கவிதா சிங் குடும்பத்தினர் வாங்கிக் கொடுத்துள்ளனர். பின்னர் 25 லட்ச ரூபாயையும் வரதட்சணையாக கேட்டுப் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கனிஷ்கா வீட்டில் இருந்த போது, கணவர் பல்ராம் சிங்குக்கு வேண்டிய பெண் ஒருவர், அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து  குடும்பத்தினரிடம் தெரிவித்தால் கொலை செய்துவிடுவோம் என கணவர் பல்ராம் மற்றும் மாமனார் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கொடுமைகளை பொறுக்க முடியாத கனிஷ்கா, ஒரு கட்டத்தில் நடந்த அனைத்தையும் தனது தாய் கவிதா சிங்கிடம் சென்று சொல்லி இருக்கிறார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா சிங், மகள் கனிஷ்காவை நெல்லைக்கு அழைத்து வந்து விட்டார். ஆனாலும் மிரட்டல் தொடரவே கவிதா சிங் தனது மகள் கனிஷ்காவுடன் நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். பணத்துக்காக பெண்ணை திருமணம் செய்துவிட்டு இப்படி தொந்தரவு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதனிடையே, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிஷ்காவின் மாமனார் யுவராஜ் சிங், தன் மீது அபாண்டமான பழியை கவிதா சிங் சுமத்தி இருப்பதாக விளக்கமளித்துள்ளார். ஒரு பைசா கூட வரதட்சணை வாங்கவில்லை என்று கூறிய யுவராஜ் சிங், உண்மையான இருட்டுக் கடை உரிமையாளர் கவிதா சிங் இல்லை என்று கூறி பகீர் கிளப்பினார்.

இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டை முன் வைத்து வருவதால் இருட்டுக்கடை அல்வா இந்த முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசுபொருளாகியுள்ளது. இருட்டுக்கடை உரிமையாளர் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, காவல்துறை பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இருட்டுக்கடை அல்வா வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் நெல்லை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day