வாக்குறுதியை மறந்த விளம்பர முதல்வர் ஸ்டாலின்... பஞ்சம் பிழைக்க புலம்பெயரும் விவசாயிகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பரத்தையே குறிக்கோளாகக் கொண்ட விதவிதமான போட்டோ சூட் ஆட்சியால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு புலம்பெயரும் அவல  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டது தருமபுரி மாவட்டம். இதனால், இம்மாவட்டத்தின் விவசாயத்தையும் அருகில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயத்தையும் காப்பதற்காக தென்பெண்ணை ஆற்றில் அழியாளம் அணை நீர்ப்பாசன திட்டத்தை 2016-ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அறிவித்தார்.  திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஆளில்லா விமானம் மூலம் அனைத்து ஏரிகளையும் ஆய்வு செய்து  தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் என்னெகோள் புதூர் திட்டம், அழியாளம் தூள் செட்டிஏரி நீர்ப்பாசன திட்டம், வாணியாரு நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்கு 400 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்ற ஆணை பிறப்பித்தார். 

அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அழியாளம் தென்பெண்ணை ஆற்றின் அணையில் இருந்து வலது புற கால்வாய் அமைத்து ராயக்கோட்டை வழியாக லிங்கனம்பட்டி ஏரிக்கு நீர் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தூள் செட்டி ஏரி,  மாரண்டஅள்ளி அணைக்கட்டு,  பாலக்கோடு ஜெர்தலால் ஏரிக்கு நீர் கொண்டுவர திட்டமிடப்பட்டது.  ஜெர்தலால் ஏரியிலிருந்து இடதுபுற கால்வாய் மூலம் தும்பல அள்ளி அணைக்கட்டு, வலது புற கால்வாய் வழியாக சின்னக்காம்பள்ளம் ஏரி, கே.செட்டி அள்ளி ஏரி, பி செட்டிஅள்ளி ஏரி, சோகத்தூர் ஏரி, கடகத்தூர் சோழவராயன் ஏரி, கே செட்டி அள்ளி ஏரி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள்  பாசன வசதி பெறும்.

ஆனால் பணிகள் தொடங்குவதற்குள் அம்மா மறைந்தாலும் அவர்கள் ஆட்சியிலேயே அழியாளம் தூள் செட்டி ஏரி  திட்டத்திற்கு  58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு பணிகள்  தொடங்கப்பட்டது. 10 கிலோமீட்டர் வரை கால்வாய் வெட்டப்பட்ட நிலையில் தூள் செட்டிஏரி அருகில் கால்வாய் வெட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகள் தெரிவித்த எதிர்ப்பால் பணிகள்  தொய்வடைந்தன. 

இந்த நிலையில் தான் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்து அழியாளம் நீர் பாசன திட்டத்தின் முதல் ஏரியான தூள் செடி ஏரி பகுதியில் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான மக்களை திரட்டி திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் அழியாளம் நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றி தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

ஆனால் வழக்கம் போல் பொய் வாக்குறுதியால் வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிப் பொறுப்பேற்று, 1,460 நாட்களை கடந்து, நான்கு ஆண்டுகள் முடிவுற்ற பிறகும்  அழியாளம் நீர்ப்பாசன திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

அரசின் அலட்சியத்தால் நீர்பாசன வசதியின்றி கரும்பு சாகுபடி குறைந்ததால்  ஆண்டுக்கு 8 மாதம் முதல் 11 மாதம் வரை செயல்பட்டு தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடித்திருந்த பாலகோடு சர்க்கரை ஆலை  இந்த ஆண்டு வெறும் 11 நாட்கள் மட்டுமே இயங்கியுள்ளது.  

இந்தநிலையில், விவசாயம் செய்ய முடியாததால்,  வாழ்வாதாரத்தை தேடி  திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பெங்களூரு, கேரளா போன்ற  மாநிலங்களுக்கும் தருமபுரி மாவட்ட விவசாயிகள் புலம்பெயரும் அவலம் உருவாகியுள்ளது. 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கிய சிறப்பு வாய்ந்த திட்டத்தினை கிடப்பில் போட்ட விளம்பர  ஆட்சியால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலமாக மாறி வருகிறது. வாழ்வாதாரம் தேடி தருமபுரி மாவட்ட விவசாயிகள் புலம்பெயர்ந்து வருகின்றனர். விளம்பர அரசு இனியாவது விழித்துக் கொண்டு விவசாயிகளின் துயர் துடைக்குமா?.....

Night
Day