எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா சாலை அருகில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களை வெளியேற்றும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்கள் மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி என அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களை, அந்த இடத்தில் இருந்து வெளியேற்றும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் அந்தந்த வீட்டு உரிமையாளர்கள், தங்களின் பெயர்களிலேயே மின் கட்டணங்களை செலுத்தி வந்தநிலையில், தற்போது அதனை இந்து சமய அறநிலையத்துறை கோயில் பெயரில் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் செலுத்தியது போன்று தங்களின் பெயர்களிலேயே மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் மின்வாரிய அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனுவை ஏற்கனவே அளித்தனர். ஆனால் இதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து போராட்டம் மேற்கொண்டும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறும் அப்பகுதி மக்கள், தாங்கள் உயிருள்ள வரை இப்பகுதியில் இருந்து வெளியர போவதில்லை என தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
நான்கு தலைமுறைக்கு மேலாக வசிக்கும் தங்களுக்கு, தற்போதைய வாரிசுதாரர்களுக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நியாய வாடகையும் முறையாக செலுத்தி வரும் ஏழை எளிய நடுதர வர்க்கத்திற்கு வீடு அவசியம் என்று கருதி தங்களையும், தங்கள் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காலம் காலமாக வசித்து வரும் வீடுகளை கையகப்படுத்துவதற்கு முயற்சி செய்யும் அதிகாரிகள், தங்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக வீட்டு வரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை முறையாக செலுத்தி வருவதை கருத்தில் கொண்டு, தங்கள் இடத்தை கோயில் பெயருக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.