வேலூர் அருகே மலை உச்சியில் கூடாரம் அமைத்து புதையலை தேடி வந்த மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு..!

எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் அருகே மலை உச்சியில் கூடாரம் அமைத்து புதையல் தேடிய நபர்களை கைது செய்யக்கோரி, மாவட்ட வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பழமை வாய்ந்த சிவன் கோவிலில் புதையல் இருப்பதாக நம்பி கூடாரம் அமைத்த நபர்களை அப்பகுதி இளைஞர்கள் விரட்டி அடித்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் பகுதியில் 1,500 அடி உயரம் உடைய கைலாசகிரி மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதையல் இருப்பதாக ஊர் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில், அது உண்மை என நம்பிய ஒரு கும்பல் அந்த மலையின் மேல் ஆங்காங்கே உள்ள பாழடைந்த கோயில் சுவர்களில் கற்களை உடைத்து தேடி வந்ததாக கூறப்படுகிறது..... 

ஆடு, மாடுகளை மேய்க்க சென்றவர்கள், மலை மேல் ஏதோ சத்தம் கேட்பதாக அச்சமடைந்து ஊர் மக்களிடம் வந்து சொன்னதாக தெரிகிறது. இதனைக்கேட்ட அப்பகுதி இளைஞர்கள், மலையின் உச்சியில் சென்று பார்த்த போது அங்கு யாரோ சிலர் கூடாரம் அமைத்து இருப்பது தெரிய வந்தது. கூடாரத்தில் மர்ம நபர்கள் உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மண்வெட்டி, கடப்பாறை, கத்தி, உளி போன்ற பொருட்களை கொண்டு அங்கிருந்த மலை கற்களை உடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

தகவலின் பேரில் அப்பகுதி இளைஞர்கள் நோட்டமிடுவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் விடாது துரத்திச் சென்ற இளைஞர்கள் அவர்கள் அனைவரையும் சுற்றி வளைத்தனர்....
 
அப்போது அந்த மர்ம நபர்களை விசாரித்ததில் சிலர் புதுச்சேரி மற்றும் சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என மாறி, மாறி பதிலளித்துள்ளனர். தொடர்ந்து விசாரித்ததில் வேலூர் கந்தனேரி பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் தான் தங்களை அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளனர்....

மேலும், அப்பகுதிக்கு ஒரு சில இளைஞர்களே சென்றதால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். பழமை வாய்ந்த சிவன் கோவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் மாய மந்திரங்கள் ஏதேனும் செய்ய வந்தார்களா என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.....

இது குறித்து சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வனத்துறை அலுவலர் குருசாமியிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். புதையலைத் தேடி மலை மீது ஒரு கும்பல் கூடாரம் அமைத்து தங்கி இருந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது....

Night
Day