'டிரான்ஸ்பார்மர்' பாலாஜியின் 'ஷாக்' ஊழல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பணமோசடி வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் உள்ள விளம்பர திமுக அரசின் அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த பெரிய மோசடி புகாரில் சிக்கியுள்ளார். மின்வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடைபெற்ற ஊழல் தொடர்பான அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

திமுக ஆட்சிக்கு வந்ததும் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு அமைச்சரானார் செந்தில் பாலாஜி. இவர் பதவிக் காலத்தில், 2021 முதல் 2023ம் ஆண்டு வரை டான்ஜெட்கோ மூலமாக டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ஆயிரத்து 68 கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட 7 வெவ்வேறு டெண்டர்களில், 397 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது என்பது அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறைக்கு பல்வேறு முக்கிய ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் அனுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்த புள்ளி விவரங்களை காண்போம். 

கடந்த 2021ம் ஆண்டு 250 KVA திறன் கொண்ட 2 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒப்புதல் அளித்த நிலையில், இதில் பங்கேற்ற 37 நிறுவனங்களுக்கு தலா 44 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் பிரித்து கொடுக்கப்பட்டன. 

டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரியான விலையை குறிப்பிட்டிருந்த நிலையில், அதை ரத்து செய்யாமல், டெண்டருக்கு ஒப்புதல் அளித்து அதை 37 நிறுவனங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பிரித்துக் கொடுத்திருப்பது மிகப் பெரிய விதிமீறல் என்று புகாரில் சுட்டிக் காட்டியுள்ளது அறப்போர் இயக்கம். 

இதன் பின்னர் 500 KVA திறன் கொண்ட 800 டிரான்ஸ்பார்மர்களை வாங்குவதற்கான டெண்டர் கடந்த 2021 நவம்பரில் வெளியிடப்பட்டது. 16 நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் பிரித்து வழங்கப்பட்டு, ஒரு டிரான்ஸ்பார்மரின் விலை 12 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த டெண்டர் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட அதே நாளில், 500 KVA கொண்ட ஒரு டிரான்ஸ்பார்மரின் வெளிச்சந்தை விலை 8 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு டிரான்ஸ்பார்மருக்கும் கூடுதலாக சுமார் 4 லட்சம் ரூபாய் அதிகம் கொடுத்து, அதாவது ஒரு டிரான்ஸ்பார்மருக்கு 12 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாய் விலையை நிர்ணயித்து விளம்பர திமுக அரசு கொள்முதல் செய்தது. இந்த வகையில் அரசுக்கு 34 கோடியே 16 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதும் அறப்போர் இயக்கத்தின் புகார்.

இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் 250 KVA திறன் கொண்ட 2 ஆயிரம் காப்பர் வூண்ட் (COPPER WOUND) டிரான்ஸ்பார்மர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. ஒரு டிரான்ஸ்பார்மரின் சந்தை மதிப்பு 4 லட்சத்து 86 லட்சம் ரூபாய். ஆனால் அதை 7 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாகவும், இதன் மூலம் மட்டும் அரசுக்கு 48 கோடியே 54 லட்சம் ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு.

இப்படி அடுத்தடுத்து வெளியான டெண்டர்களிலும் ஊழல் தலைவிரித்தாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மற்றொரு டெண்டர் மூலம்  63 KVA திறன் கொண்ட 10 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை சந்தை மதிப்பை விட ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் கூடுதல் விலைக்கு வாங்கியதால் அரசுக்கு 115 கோடி ரூபாயும், மேலும் 7 ஆயிரம் எண்ணிக்கையில் 63 KVA காப்பர் வூண்ட் டிரான்ஸ்பார்மர்களை அதிக விலை கொடுத்து வாங்கியதில் 96 கோடி ரூபாயும், 100 KVA திறன் கொண்ட 5,500 டிரான்ஸ்பார்மர்களை வாங்கியதில் 78 கோடியே 34 லட்சம் ரூபாயும், 200 KVA திறன் கொண்ட 2 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் 24 கோடியே 41 லட்சம் ரூபாயும் நஷ்டம் என டான்ஜெட்கோவின் நஷ்ட கணக்கு நீண்டு கொண்டே செல்கிறது. 

இப்படி 2021 முதல் 2023ம் ஆண்டு வரை 397 கோடி ரூபாய் கூடுதலாக கொடுத்து 28 ஆயிரத்து 300 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் விளம்பர திமுக ஆட்சியில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு.

விளம்பர திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடந்துள்ள மெகா ஊழல் தமிழக மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எப்படி இந்த ஊழல் அரங்கேறியது?  இதற்கு யார் யார் பொறுப்பு என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 

விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் சிறந்தவர்கள் திமுகவினர் என்ற பெயர் உண்டு. அந்த அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடங்கி எண்ணற்ற ஊழல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் தற்போதைய விளம்பர திமுக ஆட்சியில் அரங்கேறியுள்ளது மெகா ஊழல் ஒன்று. மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

ஆயிரக்கணக்கில் டிரான்ஸ்பார்மர்களை வாங்கியதில் நடந்துள்ள இந்த ஊழல், கண்ணும் காதும் வைத்தாற்போல அரங்கேற்றப்பட்டுள்ளது. யார் குறைந்த விலை குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்குத் தான் டெண்டர் வழங்கப்படுவது என்பது நடைமுறை. ஆனால், இங்கு நடந்திருப்பதோ நூதன ஊழல் என்றே கூறலாம். சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டதுடன், ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து ஒரு நாடகமே நடத்தப்பட்டிருக்கிறது.

எடுத்துக் காட்டாக, 250 KVA திறன் கொண்ட ஒரு டிரான்ஸ்பார்மரின் சந்தை மதிப்பு 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்றால், ஆனால் அதை வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகை ஏழரை லட்சம் ரூபாய். 33 ஒப்பந்ததாரர்கள் இந்த டெண்டரில் பங்கேற்றுள்ளனர். இதில் விநோதம் என்னவென்றால், ஒப்பந்தத்தில் பங்கேற்ற அனைவருமே ஒரே தொகையை அச்சுப் பிசகாமல் கடைசி டிஜிட் வரை சொல்லி வைத்தது போல் ஒரே மாதிரி குறிப்பிட்டிருந்ததுதான், இந்த ஊழலின் உச்சம். யாராவது இரண்டு மூன்று பேர் ஒரே மாதிரி விலையை குறிப்பிட்டிருந்தால் ஏதோ ஒரு ஃப்லூக்கில் நடந்திருக்கிறது என்று கூறலாம். ஆனால், ஒப்பந்தத்தில் பங்கேற்ற 33 பேரும் ஒரே விலையை குறிப்பிட்டிருந்த இந்த உலக அதிசயத்தை கூட்டுச் சதி என்று சொல்வதை விட வேறு என்ன சொல்ல முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சரி, ஒப்பந்ததாரர்கள் தான் கூட்டுச் சதி செய்து விட்டார்கள், இதை கண்காணிக்க வேண்டிய கமிட்டி என்ன செய்தது என்பதுதான் அடுத்த கேள்வி.. ஒரே மாதிரியாக விலை குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை எந்த கேள்வியும் கேட்காமல், அவர்களை அழைத்துப் பேசி, சரிசமமாக டெண்டர் பிரித்துக் கொடுக்கப்பட்டு அட்ஜஸ்ட்மென்ட் நடந்திருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை என்றே கூறலாம்.

இதில் அடுத்த வேடிக்கை என்னவென்றால், இந்த டெண்டர்கள் எல்லாம் கொடுக்கப்பட்ட காலத்தில் மற்ற மாநிலங்களிலும் டிரான்பார்மர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்கு வாங்கப்பட்டதை விட அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களை ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள், குறைந்த விலைக்கே வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

பல்வேறு திரைமறைவு நடவடிக்கைகள் வழியாக ஒரு டெண்டரில் அடிக்கப்பட்ட கொள்ளை 34 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இப்படி ஆயிரக்கணக்கில் 100, 250, 500 KVA திறன் கொண்ட பல்வேறு வகையான டிரான்ஸ்பார்மர்களை வாங்குவதற்கான வெளியிடப்பட்ட டெண்டர்கள் மூலம்  மக்கள் வரிப்பணம் 397 கோடி ரூபாய் ஸ்வாகா செய்யப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி. 

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆசியுடன், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சதியுடன் இந்த ஊழல் நடந்துள்ளதாக  அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

பணமோசடி புகாரில் ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் சிறை சென்றுவிட்டு வெளியே வந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றொரு புகாருக்கு ஆளாகி இருக்கிறார். இந்த மெகா ஊழல் அவருக்கு மட்டுமின்றி, அவருக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ள விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Night
Day