எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட தரங்கம்பாடியில் உள்ள ஓர் அச்சு கூடத்தில் 1892-ம் ஆண்டு டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட அச்சு இயந்திரத்தை பழமை மாறாமல் மூன்று தலைமுறைகளாக பாதுகாத்து வருகிறது அச்சக உரிமையாளர் குடும்பம். இது தொடர்பான ஒரு செய்தித் தொகுப்பு...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு கி.பி.1713-ல் வருகை புரிந்த ஜெர்மனிய பாதிரியார் சீகன்பால்கு என்பவர் இந்தியாவின் முதல் அச்சுக்கூடத்தை நிறுவி, பைபிளை வெளியிட்டார். இத்தகைய புகழ்பெற்ற தரங்கம்பாடியில் 100 ஆண்டுகளைக் கடந்து ஒரு அச்சு கூடகத்தில் பழமை மாறாத இரண்டு இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
தரங்கம்பாடியில் நீதிஅச்சகம் என்ற பெயரில் தனியார் பிரிண்டிங் பிரஸ் அமைந்துள்ளது. மூன்று தலைமுறைகளாக அவர்களது குடும்பம் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல் தலைமுறையை சேர்ந்த ராமசாமி பிள்ளை என்பவர் 1890-களில் அச்சுக்கூடத்தை துவங்கினார். இதற்காக டென்மார்க்கில் இருந்து 1892-ம் ஆண்டு செய்யப்பட்ட அச்சு இயந்திரம் ஒன்றும், அதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஈகிள் பிரஸ் என்ற இயந்திரத்தையும் வாங்கித் தொழில் தொடங்கியுள்ளார்.
மின்சாரம் இன்றி கைகளால் இயங்கும் வகையில் அழகிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதன் காரணமாக தற்போதைய நவீன காலகட்டத்திலும் செயல்பாட்டில் உள்ளது. கைகளால் மரக்கட்டை அச்சுகளை கோர்த்து, பெரிய பேப்பர்களில் பெயிண்ட் பூசி பிரின்டிங் செய்யப்படுகிறது. இதற்கான மரக்கட்டைகளால் ஆன அச்சுகளை உரிமையாளர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டவர் பலரும் கலைப் பொருட்களாக இவற்றை அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு மிகப்பெரிய விலை கேட்டும் கொடுக்காமல் அச்சு இயந்திரங்களை பாதுகாத்து வருகிறது இந்த குடும்பம். கம்ப்யூட்டர், லேசர் பிரிண்டிங் வரை தற்போது இந்த அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாம் தலைமுறையாக சண்முகம் மற்றும் சிவக்குமார் சகோதரர்கள் பொக்கிஷமாக கருதி இந்த அச்சு இயந்திரத்தை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். 133 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள அச்சு இயந்திரங்களை கேள்விப்படும் வரலாற்று ஆர்வலர்கள் நேரில் வந்து பார்த்து ஆச்சரியப்பட்டு செல்கின்றனர்.