எழுத்தின் அளவு: அ+ அ- அ
இப்படியெல்லாம் சாதனை படைக்க முடியுமா என்று பலரும் வியக்கும் அளவிற்கு இருக்கிறது 2 வயது சிறுவனின் சாதனை. சென்னையை சேர்ந்த மழலை மாறாத 2 வயது குழந்தை தேசிய மற்றும் உலக அளவில் சாதனை படைத்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார் என்றால் அது மிகையல்ல... அப்படி என்ன சாதனை படைத்தார்... வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்...
மழலை மாறாமல் கொஞ்சும் குரலில் பேசும் இவர் தான் சென்னையை சேர்ந்த ஆருஷ் தீபக். அண்ணா நகரை சேர்ந்த தீபக், அக்சயா தம்பதியரின் இரண்டு வயது குழந்தையான ஆருஷ் தீபக், மழலை மாறாத பிஞ்சு மொழியில், 260க்கும் மேற்பட்ட விலங்குகள் அதன் வண்ணங்கள், அதன் சப்தங்கள், அதனைத் தாண்டி எண்ணற்ற வாகனங்கள், அதனுள் இருக்கக்கூடிய உதிரி பாகங்களை கூறி, தேசிய மற்றும் உலகளாவிய சாதனை படைத்திருக்கிறார். 2 வயதிலேயே 2 தேசிய அளவிலான சாதனையும், 2 உலகளாவிய சாதனையும் படைத்து தேசிய அளவிலான சாதனை புத்தகத்தில், பாரத் விபூஷன் என இடம் பெற்று இருக்கிறார் மாஸ்டர் ஆருத் தீபக்.
தனது மகன் 4 விருதுகளை பெற்றிருப்பது தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். விருது பெற வேண்டுமென நினைக்காமல், தனது மகனின் விருப்பத்திற்கு விட்டதன் விளைவாகவே, இந்த சாதனையை தங்கள் மகன் பெற்றிருப்பதாக பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
பிறந்து 14 மாதங்களிலேயே தத்தித்தத்தி நடக்க தொடங்கிய ஆருஷ் தீபக், அடுத்த சில மாதங்களிலேயே 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அடையாளம் கண்டு அதனை சொல்லவும் தொடங்கி இருக்கிறான். விலங்குகள், பறவைகள், பழங்கள், எண்கள் ஆகியவற்றை குழந்தை ஆருஷ் தீபக் சொல்லச் சொல்ல பெற்றோருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
இயற்கையாகவே தங்களுடைய மகனுக்கு சில விஷயங்கள் தெரிந்திருப்பதாக கூறும் பெற்றோர், குழந்தையின் திறமையை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வந்ததாகவும், அது தங்களுக்கு மகிழ்ச்சியான தருணம் எனவும் கூறினர்.
எந்த ஒரு குழந்தையின் திறமையையும் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்காமல், அந்தந்த குழந்தையின் தனிப்பட்ட விருப்பத்தையும், திறமையையும் சரியாக பெற்றோர்கள் புரிந்து கொண்டு அதனை வெளிக்கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ஆருஷ் போன்ற, பல குழந்தைகள் சாதனை படைத்திட முடியும்.