எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முதியவரிடம் 5 கிராம் மோதிரத்தை நூதன முறையில் திருடி சென்று தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். முதியவர்களை குறி வைத்து தொடர் கைவரிசையில் ஈடுபட்டு வந்த பிரபல மோசடி மன்னனை போலீசார் தட்டி தூக்கியது எப்படி என்பது குறித்து பார்க்கலாம் இந்த செய்திதொகுப்பில்.
சென்னை வடபழனி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கடந்த 13ம் தேதி வடபழனி முருகன் கோவில் அருகே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முருகன் என்ற நபர் தான் ரியல் எஸ்டேட் தரகராக இருந்து வருவதாக கூறி, முதியவர் கோபாலிடம் அறிமுகமாகியுள்ளார்
அப்போது, தியாகராயநகரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் தனக்கு நன்கு அறிமுகமானவர் எனவும், சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்க போவதாகவும் கோபாலிடம் கூறியுள்ளார் முருகன். அதே போல், சென்னை நகருக்குள் ஏதாவது காலி இடம் இருந்தால் சொல்லுங்கள், அதையும் வாங்கிக் கொள்வார் என்றும், தங்களுக்கு நல்ல கமிஷன் வாங்கி தருவதாகவும் கோபாலிடம் நம்பும்படி பேசியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 14ம் தேதி நகைக் கடை உரிமையாளரை சந்தித்து இடம் தொடர்பாக பேசுவோம் என தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலைக்கு முதியவர் கோபாலை முருகன் அழைத்து சென்றார். அப்போது, முதலாளியை பார்க்க செல்லும் போது பந்தாவாக செல்லக் கூடாது என்றும், தங்களது மோதிரத்தை கழற்றிக் கொடுங்கள் என கோபாலிடம் கூறிய முருகன், மோதிரம் மிகவும் அழுக்கு படிந்து இருப்பதால் அவற்றை பாலிஷ் செய்து விட்டு வருவதாக 5 கிராம் மோதிரத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் கோபால், இது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, முதியவரிடம் கைவரிசை காட்டியது முதியவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடும் திருவண்ணாமலையை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.
கோடம்பாக்கத்தில் பதுங்கி இருந்த முருகனை கைது செய்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சென்னை மற்றும் விழுப்புரம் நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் முருகன் மீது வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஊர், ஊராக சென்று மோசடி செய்து அதில் வரும் பணத்தை கொண்டு 4 பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததும் விசரணையில் அம்பலமாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் தரகர் எனக் கூறி முதியவர்களை குறி வைத்து இது போன்ற மோசடிகளை அரங்கேற்றும் நபர்களால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். எனவே, புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.