எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை மாவட்ட ஆட்சியரின் NRI வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக இரு வருவாய் அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தின் பின்னனி என்ன? - மோசடி பேர்வழிகள் சிக்கியது எப்படி? என்பது குறித்து விரிவாக காணலாம் இந்த செய்தி தொகுப்பில்...
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் யாரேனும் பணியின் போது உயிரிழந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் NRI வங்கி கணக்கு செயல்படுகிறது. அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் பேரில் இருக்கும் NRI வங்கிக்கணக்கை ஆண்டு தணிக்கைக்கு உட்படுத்திய போது, அதில் 11 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து முறைகேடு குறித்து துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் வருவாய் ஆய்வாளர்களின் மோசடி குட்டு அம்பலப்பட்டுள்ளது.
NRI வங்கிக்கணக்கை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரே நபருக்கு மூன்று முறை உதவித்தொகை என்ற பேரில் பணம் TRANSFER செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்த போலீசார், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற பயனாளியை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த உதவித்தொகைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து தினேஷிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மோசடியை ஒப்புக்கொண்டதோடு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்களான சுப்பிரமணி மற்றும் பிரமோத் ஆகியோரின் பெயர்களை கக்கியிருக்கிறான். இதையடுத்து இருவரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர மோசடியின் முழு விவரமும் வெளிவந்தது.
அதாவது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் NRI பிரிவில் பணியாற்றி தற்போது மாம்பலம் வருவாய் ஆய்வாளராக உள்ள சுப்பிரமணி, உடன் பணியாற்றிய வருவாய் ஆய்வாளர் பிரமோத்துடன் இணைத்து மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. டெம்போ ஓட்டுனர் தினேஷை போலி பயனாளியாக உருவாக்கிய வருவாய் ஆய்வாளர்கள் சுப்பிரமணியும் பிரமோத்தும், போலி ஆவணங்களை தயாரித்ததோடு, ஆட்சியரின் முத்திரையையே DUPLICATE-ஆக தயாரித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலி பயனாளி தினேஷ், வருவாய் ஆய்வாளர்கள் சுப்பிரமணி மற்றும் பிரமோத் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான COSTLY ரக பைக் ஒன்றையும் 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் மோதிரம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பெயரில் இருந்த DUPLICATE ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதில் வருவாய் ஆய்வாளர்களான சுப்பிரமணியும் பிரமோத்தும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வந்தது தான் கொடுமையே. வருவாய் ஆய்வாளராக இருக்கும் போதே போலி ஆவணங்களை தயாரித்து ஆட்சியரின் ரப்பர் ஸ்டாம்பையே DUPLICATE-ஆக தயாரித்து அரசுக்கே விபூதி அடித்த இருவரும் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியர் பதவிக்கு வந்தால் என்னென்ன செய்வார்களோ என்ற பயம் தான் உள்ளுக்குள் ஊறுகிறது.