எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.
சுற்றுலா நகரமான பஹல்காமில் மலையேற்றப் பயணத்திற்காகச் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று சென்றுள்ளது. பைசரன் புல்வெளிகளில் குதிரை சவாரி சென்று கொண்டிருந்த அவர்கள் மீது மூன்று பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி வாகனங்கள் செல்ல முடியாத இடமாகும். நடந்தோ அல்லது குதிரையிலோதான் செல்ல வேண்டும். இதையடுத்து அந்த பகுதிக்கு படைகள் விரைந்துள்ளன. பயங்கரவாதிகள் பதுங்குவதற்கு ஏற்ற இடம் என்பதால் படைகள் கவனமுடன் நகர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஹல்காமிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா, முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.