எழுத்தின் அளவு: அ+ அ- அ
வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு முக்கிய கோவில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் எழுந்தருளிய சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனை பக்தர்கள் கண் குளிர தரிசித்து வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏழை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கரகோஷம் முழங்க அம்மனை வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பெண்ணைவலம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கூத்தாண்டவர் தேரை சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை நீலமேகப் பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தினை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. "கோவிந்தா, கோவிந்தா" எனும் நாமம் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேனி மாவட்டம் கண்டமனூரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியசாமி கோவில் வைகாசி விசாக விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வாக 500க்கும் மேற்பட்ட பெண்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை நினைத்து மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கலுசிவலிங்க அய்யனார் கோவிலில் கும்பாபிஷே விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடங்களை பாதயாத்திரையாக கோயிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிரிவலப்பாதையில் ஆடிப்பாடி காவிரி நீரை பாதயாத்திரையாக எடுத்து வந்து வழிபட்டனர். தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.