எழுத்தின் அளவு: அ+ அ- அ
6 வது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. நாளை மறுநாள் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இதுவரை 428 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து 6வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
6வது கட்ட மக்களவை தேர்தலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பன்சூரி ஸ்வராஜ், கண்ணையாகுமார், மேனகா காந்தி, மெகபூபா முஃப்தி, மனோகர் லால் கட்டார், நவீன் ஜிண்டால், ராஜ்பப்பர், தீபேந்தர் சிங் ஹுடா, ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.
கடைசி கட்டமாக 57 தொகுதிகளுக்கு வருகிற ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.