எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் இன்று சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த சில காலங்களாக திமுக அமைச்சர்கள் சிறைக்குப் போவதும் வருவதுமாக உள்ளதாகவும், விளம்பர திமுக அரசு மக்களை ஏமாற்றுவதற்காக 'திராவிடம்' என்று சொல்லி ஊழல் ஆட்சி நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை திலகர் திடலில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மூலை முடுக்களில் எல்லாம் போதை மருந்து கலாச்சாரம் பரவி கிடப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் விளம்பர திமுக அரசு ஆட்சி நடத்தி வருவதாகவும் விமர்சித்தார்.
புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருநள்ளாறில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை விரைவில் திறந்து இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களைத் தொகுதியில் டிவி ரிமோட் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கோவிந்தராஜ், தனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று துண்டறிக்கை வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்கள் இலவசத்தையும் பணத்தையும் எதிர்பார்த்து வாக்களிப்பதால், தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், எனவே வாக்காளர்கள் சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும் என்றும் சுயேட்சை வேட்பாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கண்ணங்குடி அருகே உள்ள சிறுவாச்சி பகுதியில் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மாங்குடி பிரச்சாரம் செய்தார். அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த உள்ளூர் காங்கிரஸார் தங்களுக்கு தகவல் சொல்லாமல் எப்படி பிரச்சாரத்துக்கு வரலாம்? என்று கூறி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் உள்ளூர் காங்கிரசாருக்கும், எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து செங்கம் பஜார் வீதியில் நடிகர் கூல் சுரேஷ் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வெயிலின் தாக்கத்தில் இருந்து நமது பாதங்களை காக்கும் காலணிகளை தைத்துக் கொடுத்தும், வெயிலின் தாக்கத்தை தணிக்கும் ஐஸ்கிரீம் மற்றும் தர்ப்பூசணி பழங்களை விற்றும், வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய வேட்பாளர் வைத்திலிங்கம், புதுச்சேரியில் மகளிர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் முதலமைச்சரின் தொகுதியிலே யாருக்கும் சென்றடையவில்லை என்றும், உள்ளூர் மக்களையே முதலமைச்சர் ரங்கசாமி ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.