திமுகவினர் பிரச்சாரம் என்ற பெயரில் ஏராளமான வாகனங்களில் பவனி வந்து போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவினர் பிரச்சாரம் என்ற பெயரில் ஏராளமான வாகனங்களில் பவனி வந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துவதும், வேட்பாளர்களை வரவேற்கும் பணியில் மாணாக்கர்களை ஈடுபடுத்துவதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மதுரை பாண்டிகோவில் திடல் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சரக்கு வாகனங்கள் மூலம் திமுக தொண்டர்கள் பொதுமக்களை அழைத்து வந்ததால் சாலையில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத  அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலமைச்சரின் பேச்சைக் கேட்க ஆர்வம் காட்டாமல் அவர் பேசிக் கொண்டிருந்தபோதே பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் ஆயிரக்கணக்கான இருக்கைகள் காலியானதால், முதலமைச்சர் ஸ்டாலின் காலி இருக்கைகளைப் பார்த்து பேசியது நகைப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து திமுக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், திமுக தொண்டர் ஒருவரின் கால் தடுப்பு கட்டையில் சிக்கியதில் அவர் தடுமாறி விழுந்தார். இதனால் அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் ஆத்தூரில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக திமுக தொண்டர்கள் பொதுமக்களை ஷேர் ஆட்டோ, சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்ததால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சாலையோரங்களிலும் திமுக தொண்டர்களும், தம்பிகளும் தங்களது வாகனங்களை நிறுத்தியதால் சாலையில் நடக்கக்கூட வழியின்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா, மணிக்கூண்டு அருகே பெரிய கடை வீதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.  அப்போது, கூட்டணி கட்சியினர் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில்  கடைவீதியில் நடுரோட்டில் வெடி வெடித்தனர். இதனால் சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். 

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கனிமொழி எம்பி சாயல்குடிக்கு வருகை தந்தார். அப்போது 15 வயதிற்கும் குறைவான சிறார்கள் பூக்களை தூவி கனிமொழியை வரவேற்றனர். மேலும் பல சிறுவர்களை அங்குள்ள உயரமான கட்டிடங்களின் மேல், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் நிற்க வைத்து, கைதட்டி உற்சாகப்படுத்த திமுகவினர் உத்தரவிட்டிருந்தனர். திமுகவினரின் இந்த செயல் பொதுமக்களிடம் கடும் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து வெளியே வந்தபோது, பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கையில் பதாகைகள் ஏந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தலில்,  மதவழிபாட்டு தளங்களில் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி திமுகவினர் மசூதி அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், இஸ்லாமிய மக்கள் முகம் சுளிச்சபடி தர்ம சங்கடத்துடன் சென்றனர்.

Night
Day