டெய்லர் மகள் டூ ப்ளையிங் ஆபிசர்... "பொன்ஷர்மினி"

எழுத்தின் அளவு: அ+ அ-

பொருளாதாரத்தில் பின்தங்கிய நெல்லையை சேர்ந்த பொன்ஷர்மினி, பல தடைகளை தகர்த்து விமானப்படையில் பிளையிங் ஆபிசராக பதவியேற்றுள்ளார். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எளிய குடும்பத்தில் பிறந்தவர் பொன்ஷர்மினி. தையல் தொழிலாளிகளான தாயும், தந்தையும், நெல்லையில் இருந்து சென்னைக்கு இடம் மாறியுள்ளனர். இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் சுறுசுறுப்பான தடகள வீராங்கனையாகவும், என்சிசி மாணவியாகவும் பொன்ஷர்மினி இருந்துள்ளார். விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என நினைத்த பொன்ஷர்மினிக்கு, வீட்டின் வறுமை பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. படித்து நல்ல வேலைக்கு சென்றால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்பதை மனதில் ஏற்றிக் கொண்டு, கல்லூரி காலத்திலே குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பது, டூரிஸ்ட் கைடு என பல வேலைகளை செய்து தனது படிப்பு மற்றும் குடும்ப செலவுகளை கவனித்து வந்துள்ளார். கல்வி உதவித் தொகைகளையும் பெற்று கடும் போராட்டத்துடன் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். 

பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஓய்வுபெற்ற சில முப்படை அதிகாரிகளின் கீழ் பணியாற்றினார். அவர்களின் கதைகள் கேட்டதால், பாதுகாப்புப்படை சீருடை அணிய வேண்டும் என்கிற அவரது குழந்தைப் பருவக் கனவை மீண்டும் தூண்டின. அதற்காக பொன்ஷர்மினி கடினமாக உழைத்தார். அவரது விடாமுயற்சி போட்டித்தேர்வில் வெற்றிபெற வைத்து இந்திய விமானப்படையில் இப்போது ஒரு அங்கமாக்கியுள்ளது. உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் பிளையிங் ஆபிசராக, விமானப்படையில் இணைந்திருக்கிறார்.

தெலுங்கானாவின் துண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியின் 2025ம் ஆண்டுக்கான இலையுதிர்காலப் பருவ மகளிர் கேடட் கேப்டனாக்கியுள்ளார். டிசம்பர் 13ம் தேதி அன்று ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் அவர் அதிகாரியாகப் பதவியேற்றதன் மூலம் அவரது கனவு நிறைவேறியுள்ளது. ஒரு சாதாரண டெய்லரின் மகள் ஃபிளையிங் ஆபீசர்- ஆக உயர்ந்திருப்பது, பொன்ஷர்மினி போன்று முப்படைகளில் சேர வேண்டும் என்ற லட்சியம் கொண்ட பல இளைஞர்களுக்கு பெரிய உத்வேகமாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

Night
Day