எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் குருமகாசன்னிதானம், ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட கந்தசாமி தேவர், குணவதியம்மாள் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டில் கோவை காமாட்சிபுரம் பகுதியில் குடியேறினர். இவர்களுக்கு 5வது குழந்தையாக பிறந்த சிவலிங்கேஸ்வரர், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு நொய்யல் ஆற்றில் கிடைத்த அம்மன் சிலையை எடுத்து வந்து ஆற்றங்கரை ஓரத்தில் நிறுவி அதற்கு பூஜைகள் செய்து வந்தார். பின்னாளில் அது பரமேஸ்வரி கோயிலாக மாறியது. இவரது ஆன்மீக ஈடுபாட்டால் காமாட்சிபுரி ஆதீனத்தை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தார். தமிழகத்தில் உள்ள மூத்த ஆதினங்களில் ஒருவரான இவர், ஏழை, எளிய மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பல கோயில்களை தனது சொந்த செலவில் புனரமைத்து குடமுழுக்கு செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பல ஆண்டுகள் தேவர் குருபூஜை நிகழ்வை முன் நின்று நடத்தியுள்ளார். அண்மையில், டெல்லியில் நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றார். 56 வயதான சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று பாதிப்புடன் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது பூதவுடல் இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதினத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்குள்ள பிரதான மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரளான பக்தர்களும் பொதுமக்களும் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.