தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று குருத்தோலைகளை ஏந்தி பவனியாக சென்றனர்.

இயேசுபிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு, ஓசன்னா பாடலை பாடியபடி ஜெருசலேம் நோக்கி பயணம் செய்தார். அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைகளை ஏந்திக்கொண்டு பவனியாக சென்று சிறப்பு திருப்பலியில் பங்கேற்பர். அதன்படி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற குருத்தோலை பவனியில்  திரளான பக்தர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி ஓசன்னா கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி, பவனியாக புனித லூர்து அன்னை ஆலயத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ராசிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, ஒசன்னா பாடல்களை பாடி பவனி சென்றனர். பேராலாயத்தின் அருகில் தொடங்கிய பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் புனித சவேரியார் பேராலயத்தை வந்தடைந்தது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள புனித பத்தாம் பத்தி நாதர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி, ஓசன்னா பாடலை பாடிக்கொண்டு தனியார் பள்ளியில் இருந்து பவனியாக புனித பத்தாம்பத்தி நாதர் தேவாலயத்தை சென்றடைந்தனர்.

காரைக்கால் புனித தேற்றரவு அன்னை பேராலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர். அப்போது அவர்கள் ஓசன்னா பாடல்களை பாடியபடி  முக்கிய வீதிகள் வழியாக சென்று தூய தேற்றரவு அன்னை ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், ஜென்மராக்கினி பேராலயம் மற்றும் ரெட்டியார்பாளையம் புனித அந்தோனியார் பேராலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பங்கு தந்தைகள் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில்ல் குருத்தோலைகளை ஏந்தி, ஓசன்னா பாடல் பாடியபடி, பவனியாக சென்றனர். தொடர்ந்து பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.




Night
Day