எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி முருகன் கோயிலில் போலீசாருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் திருநங்கை ஒருவரை பெண் டிஎஸ்பி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச தினமான இன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களிடம் திருநங்கைகள் யாசகம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் திருநங்கைகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் டிஎஸ்பி சாந்தி, திருநங்கை ஒருவரை கன்னத்தில் அறைந்ததால், மற்ற திருநங்கைகள் அனைவரும் பெண் டிஎஸ்பி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.