எழுத்தின் அளவு: அ+ அ- அ
வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பதால், புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பிக்கிறது. சரியான உள்கட்டமைப்புகள், முறைப்படுத்தப்படாத வாகன நிறுத்தங்கள் ஆகியவையே போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைந்துள்ள புதுச்சேரியை, மினி கோவா என சுற்றுலா பயணிகள் அழைப்பது உண்டு. இதனால் சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு, நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் புதுச்சேரி கடற்கரைகள், பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், படகு குழாம்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றில் பொழுதை கழித்து உற்சாகம் அடைகின்றனர்.
மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் மதுபானங்கள் குறைந்த விலையில் கிடைப்பதாலும், உள்ளூர் மதுபானம் மட்டுமின்றி வெளிநாடு மதுபானங்களும் கிடைப்பதால் மதுபிரியர்கள் மற்றும் இளைஞர்கள் புதுச்சேரியை முதலில் தேர்வு செய்கின்றனர்.
இந்த நிலையில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் புதுச்சேரியை நோக்கி படையெடுப்பதால் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து காட்சி அளிக்கிறது. குறிப்பாக ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை, புஸ்ஸி வீதி, கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலை, இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி சதுக்கங்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிறிய நகரமான புதுச்சேரியில், மேம்பாலங்கள் மற்றும் மாற்று பாதையில் செல்ல போதிய இட வசதி இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கான முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தங்கும் விடுதிகள் விடுமுறை நாட்களில் நிரம்பி வழிவதால், சுற்றுலா பயணிகள் தங்க இடமின்றி சாலையோரங்களில் தங்கும் அவலமும் ஏற்பட்டது. இதனை பார்த்த உள்ளூர் வாசிகள் சிலர் ஹோம் ஸ்டே என்கிற பெயரில் தங்களின் வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்றி வாடகை விட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் அங்கு வாகன பார்க்கிங் வசதி இல்லாததால், சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை சாலைகளிலே நிறுத்தும் அவலமும் நிலவுகிறது.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ராஜூவ் காந்தி சதுக்கத்தில் இருந்து 7 கீலோ மீட்டர் தூரம் வரை உள்ள கடலூர் சாலையை இணைக்கும் மேம்பாலம், புதுச்சேரி கடலூர் சாலையில் ரயில்வே பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆட்சியாளர்களும் துணை நிலை ஆளுநருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக, மேம்பால பணிகளில் கிடப்பில் போடப்பட்டது. அதுமட்டுமின்றி உப்பனாறு பால பணிகளும் பாதியிலயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆளும் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கிடப்பில் உள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்தி, புதுச்சேரியை போக்குவரத்து நெரிசல் இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.