எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு மாடுகள் பலியிடத் தடை விதிக்கவும், மலை மீதுள்ள தர்காவிற்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்றும் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் நிஷாபானு- ஸ்ரீமதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது என்றும் அதனடிப்படையில், ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், இரு சமய மக்களும் தங்களது வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், இதில் எந்தவொரு வெளிநபரும் தலையிட முடியாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த தொல்லியல் துறை, திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானதால் அங்கு எந்த ஒரு செயலுக்கும் துறையின் அனுமதி பெறவேண்டும் எனத் தெரிவித்தது.
அதற்கு, கடவுள்கள் சரியாகத்தான் இருக்கின்றனர், சில மனிதர்கள் சரியாக இல்லை எனக் கூறிய நீதிபதிகள், மலை தொல்லியல் துறைக்கு சொந்தமானது என கூறுவதை ஏற்க முடியாது என்றும் மலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் குறிப்பிட்டனர். மேலும், தொல்லியல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.