பங்குனி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குனி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலயத்தில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் மருதேரி கிராமத்தில் தெலுங்குவருட பிறப்பை முன்னிட்டு, 200 ஆண்டுகள் பழமையான அரியக்கா - பெரியக்கா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். 

கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் 1000க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தரத்தில் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு கோவிலை வலம் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தங்களது குழந்தைகளுக்கான நேர்த்திகடனை நிறைவேற்றி வழிபாடு செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் அருகேயுள்ள காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற ராமர் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவில் உற்சவ விழாவில், அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். கருமாரி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் யுகாதி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொன் வரதராஜ பெருமாள் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 2மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற தீமிதி திருவிழாவில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்திபெற்ற சிவ தலமான அவிநாசிலிங்கேசுவரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு தண்ணீர் ஊற்றியும் நீர் மோர் வழங்கியும் மாலைகள் கொடுத்தும் தேரை வரவேற்றனர். 

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், உலக நன்மைவேண்டி நடைபெற்ற 108 விளக்கு பூஜையில், பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபாடு செய்தனர். 

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள நாடியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய்த்தாழி வீதியுலா வெகு விமரிசையாக நடந்தது. இதில் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய நாடியம்மனின் அழகை, பக்தர்கள் கண்குளிர பார்த்து தரிசனம் செய்தனர். 

Night
Day