எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற ராமநவமி உற்சவம், சித்திரை திருவிழா, தீமிதி திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை யொட்டி குழந்தைகளின் கோலாட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் பல்வேறு பக்தி பாடல்களுக்கு ஏற்றார் போல குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குழந்தைகள் கைகளில் விளக்கு ஏந்தி அரங்கேற்றிய நடன நிகழ்ச்சி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் உடனுறை இளங்கிளி அம்மன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 11-வது நாள் நிகழ்ச்சியில் ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன் ஆகிய சுவாமிகளை பெரும்பேர் கண்டிகை சுப்பிரமணிய சுவாமி மூன்று முறை வலம் வந்து காட்சி தரும் நிகழ்வு நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 9ம் நாள் நிகழ்வில் சிங்கமுக வாகனத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். மேளதாளத்துடன் அம்மனுக்கு வீதிகள் தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி மற்றும் கரகம் எடுத்து வந்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர். அம்மன் வீதி உலா நிகழ்ச்சியை வீடுகள் தோறும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் 103 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 12 நாட்கள் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழாவில் தினந்தோறும் அம்மன் மண்டபப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து வழிபாடு செய்தனர். கோவில் முன் அமைக்கப்பட்ட 6 அடி நீளமுள்ள குண்டத்திற்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து மாணவிகள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர். விழாவை முன்னிட்டு தண்டுமாரியம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.