எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற குண்டம் திருவிழா, தங்கம் தேர் வழிபாடு, திருவிளக்கு பூஜை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Roll visuals :
கோவை மாவட்டம் போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. 50 அடி நீளம் கொண்ட குண்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த குண்டம் திருவிழாவை காண சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற தங்கத்தேர் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முன்னதாக சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருள சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி தங்கத்தேரில் கோவில் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் ஆயிரத்து 8 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் ஆயிரத்து 8 குங்கும பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் வழிபாடு நடத்தினர்.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கள்ளர் வேடத்தில் அலங்கரிக்கப்பட்ட கள்ளழகர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிலம்பாட்டம், கம்படியுடன், கள்ளழகர் வெள்ளை பாகையுடன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, கிராமத்தில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் மாமன் மைத்துனர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி விழாவை நிறைவு செய்தனர்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி ஆலயத்தின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில் ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் தங்கமாரியம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் தங்க மாரியம்மன் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது.