எழுத்தின் அளவு: அ+ அ- அ
கிறிஸ்தவர்களால் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வியாழன் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் தாழ்மையை கற்றுக் கொடுக்கும் விதமாக பாதங்களைக் கழுவும் சடங்குகள் நடைபெற்றன.
சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையார் தேவாலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் பாதங்களை கழுவும் சடங்கு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் , மூன்றாம் பாலினத்தார் , குழந்தைகள் , ஆண்கள் , பெண்கள் உள்ளிட்ட 12 பேரின் பாதங்களை பாதிரியார்கள் கழுவினர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் நிகழ்ச்சியில் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவும் சடங்கு நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் சீடர்கள் போன்று உடையணிந்த தொண்டர்களின் பாதங்களைக் கழுவினார்.அதனைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர்வாத நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திலும் பெரிய வியாழன் தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தேவாலய பாதிரியார்கள் பக்தர்களின் கால்களை கழுவினர். அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.
திருச்சி மேலப்புதூர் தூயமரியன்னை பேராலயத்திலும் பெரிய வியாழன் தினம் கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பங்கு தந்தை சவரிராஜ் 12 பேரின் பாதங்களைக் கழுவும் நிகழ்வு நடைபெற்றது. இதேபோன்று குழந்தை இயேசு திருத்தலம் மற்றும் மணப்பாறை, துறையூர், முசிறி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறஸ்தவ தேவாலயங்களிலிருந்தும் புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் திரு இருதய ஆலயத்திலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு 12 பேருக்கு பாதங்களை கழுவி காலை முத்தமிட்டு அவர்களுக்கு புத்தாடை மற்றும் ரொட்டி துண்டுகளை வழங்கினார். பின்னர் சிறப்பு திருப்பலி மற்றும் இரவு ஜெபம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.