எழுத்தின் அளவு: அ+ அ- அ
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை தொடர்ந்து திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை புதுப்பித்துக் கொண்டனர்.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10ஆம் நாள் நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமியும், அம்மனும் அதிகாலை அழகிரிசாமி நாயுடு, கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் நான்கு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்தனர். தொடர்ந்து, திருக்கல்யாண மேடையில் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டது. திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மனின் வலதுபுறம் பவளகனிவாய் பெருமாளும் சுந்தரேசுவரரின் இடது புறம் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடனும் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ரிஷப லக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கோவிலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை கண்டு ரசித்தனர். பின்னர் பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்து கொண்டனர்.