எழுத்தின் அளவு: அ+ அ- அ
இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை தமிழகத்தில் கோலாகலகமாக கொண்டாட்டப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் மெழுகுவத்தி ஏற்றி இயேசுவின் உயிர்த்தெழுதலை வரவேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, திருச்சி பாலக்கரையில் உள்ள உலகமீட்பர் பசிலிக்காவில் வாணவேடிக்கைகள் முழங்க இயேசு உயிர்பெற்று எழுந்த நிகழ்ச்சி தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்பட்டது, தொடர்ந்து பங்குத்தந்தை ஜேம்ஸ் செல்வநாதன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பங்குமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
ஈஸ்டர் திருநாளையொட்டி மயிலாடுதுறை புனித அந்தோணியார் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆலய பங்கு தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்ருபமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பங்குத்தந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகர் திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள தூய உலக மாதா ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்ரூபமாக நடைபெற்றது, இதில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி பாடல்களை பாடி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.
தென்காசி நகரப் பகுதியில் உள்ள புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், இயேசு உயிர்த்தெழும் தினத்தை கொண்டாடும் வகையில் புத்தாடைகள் அணிந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.