டெல்லியிலிருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கான அரசுமுறை சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்றார்.

4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தலைநகரில் நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக, பிரதமர் மோடியின் பயணம் தாமதப்பட்டது. காலை 8.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த பிரதமரின் பயணம், காலை 9.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி ஜோர்டானுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்னு அல் ஹுசைன் மற்றும் பிரதமர் ஜாபர் ஹாசன் ஆகியோருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி நாளை எத்தியோப்பியா செல்கிறார். எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி  உரையாற்றுகிறார். எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியை சந்திக்கும் பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாட உள்ளார். தமது பயணத்தின் கடைசி கட்டமாக ஓமன் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

varient
Night
Day