எழுத்தின் அளவு: அ+ அ- அ
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி வன்முறை வெடித்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக உள்ள சமாதியை அகற்ற வேண்டும் என்று இந்துத்வா அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பிரச்சினையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், நாக்பூரின் மஹால் பகுதியில் உள்ள சிவாஜி சிலை அருகே திரண்ட விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் எனக் கோரி கோஷங்களை எழுப்பினர். அவுரங்கசீப்பின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை அவர்கள் எரித்தனர். அந்தப் போராட்டத்தின் போது இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியது. அப்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது.
அங்குள்ள சிட்னிஸ் பூங்கா பகுதியில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. கோட்வாலி கணேஷ்பத், ஹன்சாபுரி ஆகிய பகுதிகளுக்கும் பரவிய வன்முறை, கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் ஏராளமான வீடுகள், இருசக்கர வாகனங்கள், கடைகள் சேதமடைந்தன.