எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை, யூடியூபில் வெளியிட்டு நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் பிரபல யூடியூபர் இர்ஃபான். இந்த வீடியோ அவரது "இர்பான்ஸ் வியூ" யூடியூப் சேனலில் வெளியான நிலையில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அதனை பார்த்துள்ளனர்.
இதனிடையே, குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கியவர், கடந்த சில தினங்களுக்கு முன் தனக்கு பிறந்த குழந்தையின் வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், அறுவை சிகிச்சை அரங்குக்குள் சென்று குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்த அவர், குழந்தையின் தொப்புள் கொடியையும் தானே வெட்டி அகற்றியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ள நிலையில், தொப்புள்கொடியை வெட்டியது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அறுவை சிகிச்சை அரங்கிலும் வீடியோ எடுத்தது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும், உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட உபகரணங்கள் முறையான மருத்துவ முறையில் சுத்தம் செய்யப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே, சர்ச்சை வீடியோவுக்கு இதுவரை மன்னிப்புக் கேட்காத இர்ஃபான், தற்போது மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, உரிய விளக்கம் அளிக்கக் கோரி பிரசவம் நடைபெற்ற சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனது குழந்தைக்கு மருத்துவ சட்டத்தை மீறி தொப்புள் கொடியை வெட்டி சர்ச்சையை ஏற்படுத்திய இர்பான் மீது மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்த நிலையில், அந்த வீடியோவை சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து நீக்கினார்.
சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, விதிமுறைகளை மீறி விளம்பர நோக்கத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதாக சமூக சமத்துவ மருத்துவர் சங்கத்தின் மருத்துவர் சாந்தி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட யூடியூபர் இர்ஃபான் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.