எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேலூர் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் ஐந்து ஆண்டுகளாக காதலித்த காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாட்டைக் காக்கும் ராணுவ வீரர் காதலியின் நம்பிக்கையைக் காக்க தவறியது ஏன் என இந்த செய்தித் தொகுப்பு விளக்குகிறது...
இந்திய ராணுவத்திற்கு அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பும் பெருமை கொண்டது வேலூர் மாவட்டம். சிப்பாய் புரட்சி மூலம் இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட வரலாறு கொண்டதும் வேலூர் மாவட்டம் தான். இத்தகைய சிறப்புக்குரிய மாவட்டத்தைச் சேர்ந்த நஞ்சுகொண்டபுரம் கொல்லைமேடு என்ற சிற்றூரைச் சேர்ந்த பிரபாகரன், நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ராணுவப் பணிக்கு இடையிலும் தனது சொந்த ஊரான கொல்லை மேடு பகுதியைச் சேர்ந்த அன்பரசி என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் காதலித்த அன்பரசியை ஏமாற்றிய ராணுவ வீரர் பிரபாகரன் அவரது அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த அன்பரசி, காதலித்த தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்த பிரபாகரன் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி வழங்குமாறு கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல் துறைக்கே உரித்தான மெத்தனப்போக்கால் வழக்கம் போல் வேலூர் மகளிர் காவல் நிலைய போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரபாகரனுக்கும் அவரது அக்கா மகளுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் காதலன் ஏமாற்றியதால் ஏற்கனவே மனமுடைந்திருந்த அன்பரசி சட்டத்தின் மீதும் காவல் துறையின் மீதும் வைத்திருந்த சிறு நம்பிக்கையும் சிதைந்ததால் விரக்தியின் உச்சிக்கே சென்று வியாழக் கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல விரைந்து வந்த ஜமுனாமுத்தூர் காவல்துறையினர் அன்பரசியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர்.
ஆனால் மகளை இழந்து தவிக்கும் பெற்றோரும் அவரது இழப்பால் துன்புற்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ராணுவ வீரர் பிரபாகரனை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் புனிதா, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தையடுத்து அன்பரசியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அன்பரசியின் உடலை வாங்கிக் கொண்டனர்.
அன்பரசியின் மரணத்திற்கு காதல் என்ற போர்வையில் ஏமாற்றிய ராணுவ வீரர் பிரபாகரனை விட அன்பரசியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரது நம்பிக்கையை சிதைத்த காவல் துறையே முக்கிய காரணம் என்பதே அப்பகுதியினரின் குற்றச்சாட்டாக உள்ளது.