எழுத்தின் அளவு: அ+ அ- அ
"வீர தீர சூரன் பாகம் 2 " திரைப்படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திரைப்படம் வெளியானது.
விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் படத்திற்கு பிரச்சனை வந்தது. மும்பையை சேர்ந்த B4U எனும் நிறுவனம் திரைப்படத்திற்கு முதலீடு செய்திருந்த நிலையில் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தேதிக்குள் OTT உரிமையை விற்காததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி 50 சதவீத நஷ்டஈடு தரவேண்டும் என கூறி படத்தை வெளியிட தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்துவிட்டு படத்தை வெளியிட பட தயாரிப்பு நிறுவனத்திற்கு டெல்லி நீதிமன்றம்உத்தரவிட்டது. இதனிடையே, இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 'வீரதீர சூரன்' பட வெளியீட்டிற்கு தடை இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு நேரில் ஆஜராகி, B4U நிறுவனத்துடன் சமாதான உடன்பாடு ஏற்பட்டதாகவும், இதன்படி, மூன்று நாட்களுக்குள் படத்தின் சாட்டிலைட் உரிமைகளை வழங்குவதற்கும், முதற்கட்டமாக இரண்டரை கோடி ரூபாய் செலுத்துவதற்கும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை இரு தரப்பும் ஏற்ற நிலையில், படத்தை வெளியிட தடை இல்லை என உத்தரவிட்டு திரையரங்குகளில் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முன்னதாக வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகாது என கூறப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் ,படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திரையரங்குகள் முன் ரசிகர்கள் திரண்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.