"பேசினது போதும் உட்காருயா"... கடுகடுத்த பொன்முடி - எகிறிய மஸ்தான்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பொன்முடியும், செஞ்சி மஸ்தானும் மேடையிலேயே வார்த்தை மோதலில் ஈடுபட்ட கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர்களுக்குள் இருந்த பூசல் மேடையில் மோதலாக வெடித்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திமுக ஆட்சி அமையும் போதெல்லாம், விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி அமைச்சராகிவிடுவார். இதனால் குறுநில மன்னரைப் போல வலம் வந்த பொன்முடி, பொதுமக்களிடத்தில் மட்டுமின்றி தனது சொந்த கட்சியினரைக் கூட மதிக்காமல் ஆணவப் போக்குடன் நடந்து கொள்வது நாம் அறிந்ததே. 

விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி தனி லாபி செய்து வருவதைக் கண்டு எரிச்சல் அடைந்த திமுக மேலிடம், விழுப்புரம் மாவட்ட திமுகவை திடீரென வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து, தெற்கு மாவட்டத்திற்கு செஞ்சி மஸ்தானையும், வடக்கு மாவட்டத்திற்கு புகழேந்தியையும் மாவட்ட செயலாளர்களாக நியமித்தது. 

மேலும் கடந்த 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொன்முடி மட்டுமின்றி, செஞ்சி மஸ்தானையும் அமைச்சராக்கி விழுப்புரம் மாவட்டத்தில் குறுநில மன்னரை போல் வலம் வந்த பொன்முடியை டம்மியாக்கும் செயலில் மேலிடம் இறங்கியது...

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட திமுகவில் பொன்முடி கோஷ்டி, மஸ்தான் கோஷ்டி என இருப்பிரிவுகள் உருவாகின. மேலும், அமைச்சர் பொன்முடிக்கும், அமைச்சர் மஸ்தானுக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடாக பொதுமேடையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

விழுப்புரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஞாயிற்று கிழமை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மைக்கை பிடித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதனால் டென்ஷனான அமைச்சர் பொன்முடி அடிக்கடி தனது கையில் கட்டியிருந்த கை கடிக்காரத்தை பார்த்தபடி கடுகடுவென அமர்ந்திருந்தார். 

ஒரு வழியாக தனது பேச்சை மஸ்தான் நிறைவு செய்ய, அடுத்ததாக பேசவந்த  பொன்முடி, மஸ்தானிடம் இருந்து மைக்கை வெடுக்கென பிடிங்கி கொண்டு உட்காருய்யா என கூறினார். இதனை சற்று எதிர்பாராத அமைச்சர் மஸ்தான், ஏன் நான் பேச கூடாதா என எகுற..... நீ பேசிய வரைக்கும் போதும் உட்காருய்யா என அமைச்சர் பொன்முடி கூற.. அதை நீ சொல்லாத என பதிலுக்கு அமைச்சர் மஸ்தான் கூற மோதல் உச்சத்தை எட்டியது. 

பொது நிகழ்ச்சியில் பலர் முன்னிலையில் விழா மேடையிலேயே அமைச்சர்கள் பொன்முடியும், மஸ்தானும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் திமுகவில் மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சியினரிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொன்முடியை டம்மியாக்க நினைத்து, மஸ்தானுக்கு அமைச்சர் பதவியை வழங்கிய திமுக மேலிடத்திற்கு, தற்போது, இருவரின் சண்டை பொது மேடை வரை வந்துள்ளது புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day